ETV Bharat / state

ரூ.7840 கோடியில் ஒகேனக்கல் 2ஆம் கட்ட கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்: தருமபுரி எம்பி செந்தில்குமார் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 4:45 PM IST

Etv Bharat
Etv Bharat

Dharmapuri MP Senthilkumar: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2 அலகு திட்டத்திற்கு ரூ.4000 கோடி ஜப்பான் நிறுவனத்திடம் பெறலாம் எனவும், இத்திட்டத்தின் மூலம் 2054 வரைக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தண்ணீர் பற்றாகுறை இருக்காது எனவும், மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டத்திற்கு முழுவீச்சில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடப்பதாகவும் தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.7840 கோடியில் ஒகேனக்கல் 2ஆம் கட்ட கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை முதலமைச்சர் அறிவிப்பார் - தருமபுரி எம்பி தகவல்

தருமபுரி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 7840 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என செந்தில்குமார் எம்பி தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட பெண்கள் நவீன கழிவறை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை எஸ்.செந்தில்குமார் எம்பி இன்று (நவ.29) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.14.05 லட்சம் மதிப்பில், மாணவிகளுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை திறந்து வைத்த தருமபுரி எம்பி செந்தில்குமார், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம் மூன்றாவது தவணையாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான விவசாய நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது. இதில் மூக்கனூர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ரயில் பாதை தள்ளிப் போடக்கூடிய சூழல் இருந்து வருகிறது.

மொரப்பூர்-தருமபுரி ரயில் திட்டம்: இப்பணிகள் 70 சதவீதத்தை எட்ட உள்ள நிலையில், இந்த இடம் மாற்றத்தால் சில பிரச்சனை வரும். அதனால், ரயில்வே பணிகள் தொடங்குவதில் எந்த விதமான தொய்வுமில்லை. ரயில்வே துறையினர் இந்த பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். மேலும் 70 சதவீத பணிகள் முடிவுற்றவுடன் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்படும்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2 அலகு திட்டம்: அதேபோல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டப் பணி தொடங்குவதற்கு ஒன்றிய அரசு ரூ.7,840 கோடிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில், ரூ.4000 கோடிக்கு மேல் ஒன்றிய அரசு ஜல்சக்தி திட்டத்தின் மூலம் வழங்குகிறது. இதில், தருமபுரி மாவட்ட நிர்வாகத்தில் ரூ.4000 கோடி பணம் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது; அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், மீதி இருக்கிற ரூ.4000 கோடியை ஜப்பான் ஜிகா நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முதலாம் கட்டப்பணிக்கு ஜப்பான் நிதி உதவி அளித்தது' என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்: 'இந்த பணிகள் திருப்தி தரமாக இருந்ததால், அவர்களே நமக்கு விருது வழங்கியிருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு திருப்பி இருப்பதால், இரண்டாம் கட்ட பணிகளுக்கும் அவர்களே கடன் வழங்குகிறார்கள். அதற்கானப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 2054 வரைக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிப்காட் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது' எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கலசப்பாடி, கோட்டூர் மலை, பாலமலை போன்ற மலைக்கிராமங்களுக்கு சாலை அமைப்பதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு மாவட்ட நிர்வாகம் என ஆறு விதமான அனுமதிகளை பெற்று இருக்கிறோம். தற்பொழுது இந்த வனப்பகுதிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் 2 கோடி ரூபாய் வரை தொகை செலுத்த வேண்டும்.

இது பணத்தை கட்டுவதற்கு ஒன்றிய அலுவலகத்தில் நிதியில்லை. சாலை அமைப்பதற்கு பணம் இருக்கிறது. ஆனால், முன்வைப்பு தொகை செலுத்துவதற்கான பணம் இல்லாததால் காலதாமதம் ஆகிறது. இதனை வேறு ஏதேனும் பணிகளில் முன்வைப்பு தொகையை செலுத்தாத காரணத்தால் இந்த சாலை பணி நிலுவையில் இருந்து வருகிறது' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தருமபுரி, கிருஷ்ணகிரி மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு.. 2ஆம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.