ETV Bharat / state

"தமிழ் இனி மெல்ல சாகும்" - மருத்துவர் ராமதாஸ்!

author img

By

Published : Feb 24, 2023, 8:50 AM IST

தமிழ் வேகமாக உயிரிழந்து வருகிறது - ராமதாஸ்
தமிழ் வேகமாக உயிரிழந்து வருகிறது - ராமதாஸ்

தமிழ் வேகமாக உயிரிழந்து வருகிறது என்றும், தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் ‘தமிழைத்தேடி’ பயணத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழைத்தேடி பிரச்சார பயணத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

கடலூர்: பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் ‘தமிழைத்தேடி’பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரசார பயணம், வருகிற 28ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.

நேற்று (பிப்.23) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். மேலும் வழக்குரைஞர் சண்.முத்து கிருஷ்ணன் வரவேற்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழ் என்ற பெயரை கொண்ட நாட்டில் இருந்து வருகிறேன். நான் பார்க்கும் இடங்களில், வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை.

ஆனால் நாம் இன்னும் பழம் பெருமைகளை பேசி வருகிறோம். தமிழ் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறது. தமிழை, தமிழ் அன்னையைத் தேடி வருகிறேன். தமிழ் புலவர்கள், சான்றோர்கள் வீட்டில் பதுங்கி இருக்கிறதா? என்று கேட்டால், அங்கும் கலப்பு மொழிதான் பேசுகிறார்கள். பிரான்ஸ் நாட்டில் ‘தேங்க்யூ’ என்ற வார்த்தையை நீக்கி விட்டு ‘மெர்சி’ என்று மாற்றி விட்டனர்.

ஆனால் நாம் 100க்கு 99 வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசி வருகிறோம். தமிழை, தமிழ் அன்னையைத் தேடி மதுரை வரை செல்கிறேன். அதற்குள் தமிழ் அன்னை இங்குதான் இருக்கிறார் என்று யாராவது சொன்னால், எனது பிரச்சார பயணத்தை தள்ளி வைக்கிறேன். தமிழ் அன்னையைப் பார்க்க ஓடி வருவேன்.

தமிழ்நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட புலவர்கள், அறிஞர்கள் வீடுகளிலும் தமிழை கலப்பு மொழியாகத்தான் பேசி வருகின்றனர். மேடையில் மட்டும் தமிழ் அன்னை என்று பேசுகிறார்கள். நான் மதுரை வரை தமிழ் அன்னையைத் தேடி செல்கிறேன். ‘மெல்ல தமிழ் இனி சாகும்’ என்று திருநீலகண்ட சாஸ்திரி கூறினார். அவர் கூறியதுபோல் தமிழ் மெல்ல அல்ல, வேகமாக செத்து வருகிறது.

தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் தமிழ் வேகமாக அழிந்து வருகிறது. கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில்தான் தமிழ் பேசுவதில்லை. கலப்பட தமிழ் பேசுகிறோம். ஒன்று செய்யலாம். அதாவது, வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் சொல்ல வேண்டும். ஒரு மாதம் கழிந்தும் அது நடக்கவில்லை என்றால், கருப்பு மையை வைத்து அழியுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: "விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடும் அரசு, மறுபுறம் விளை நிலங்களை கையகப்படுத்துகிறது" - அன்புமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.