கடலூர்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 10 பேர் உயிர் இழந்த நிலையில், மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதன் எதிரொலியாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜா ராம் தலைமையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய ஏழு உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற மதுவிலக்கு வேட்டையில், கடலூர் மாவட்டத்திலிருந்து 88 சாராய வியாபாரிகள், கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் 517 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பார்கள் அதுபோன்று தமிழகத்தில் எங்காவது ஒரு பகுதியில் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகு தான் ஒவ்வொரு முறையும் பல்வேறு மாவட்டங்களில் இது போன்று சம்பவத்திற்குத் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது கைது செய்வது வழக்கம். இது போன்று தான் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளிகளை அடுத்து கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று சாராய வியாபாரிகள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கண் துடைப்பு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடலூர் நகரப் பகுதிகளில் மார்க்கெட் காலனி பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்குக் கடந்த மாதம் மட்டுமல்லாமல், அவ்வப்பொழுது புகார்கள் வந்தது. மேலும், திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனி சுற்றியுள்ள பகுதிகளில் சாராய விற்பனையைத் தடுக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் சீரழிவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.