ETV Bharat / state

சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு தடை விதித்த சிதம்பரம் தீட்சிதர்கள்!

author img

By

Published : Jun 25, 2023, 7:54 AM IST

Updated : Jun 25, 2023, 8:04 AM IST

சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு தடை வித்தித்த சிதம்பரம் தீட்சிதர்கள்
சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு தடை வித்தித்த சிதம்பரம் தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் பதாகை வைத்தது பொதுமக்கள் மற்றும் அதிகாரியிடையே பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் பதாகை வைத்தது பொதுமக்கள் மற்றும் அதிகாரியிடையே பெரும் சர்ச்சை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ் பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று (ஜூன் 25) தேரோட்டமும், நாளை ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதால் நேற்று முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சிதர் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் இன்று மாலை கோயிலுக்குள் சென்றனர். கோயிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா அங்கிருந்த பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பதிலுக்கு செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள், அரசாணையை மீறி கனகசபை மீது ஏறக்கூடாது என பதாகை வைக்கக் கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள் என கூறினார். ஆனால் தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோயிலுக்குல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் பதற்றத்தை தவிர்க்கும் விதமாக பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, “சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி எல்லோரும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதுதான் அரசாணை.

அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தினமும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆனால், அதற்கு மாறாக தீட்சிதர்கள், இப்போது கனகசபை மேல் ஏறக் கூடாது என பதாகை வைத்துள்ளனர். அதனால் அந்த பதாகையை அகற்றச் சென்றேன்.

ஆனால், அதனை அகற்ற விடாமல் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் அனுமதி பெற்றுதான் பதாகை வைத்திருக்கிறோம் என தவறான தகவலை தீட்சிதர்கள் கூறினர். பதாகையை அகற்ற தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். நடந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.

மேலும், கோயிலினுள் நடந்த சம்பவங்கள் குறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் கூறுகையில், “இன்று முதல் கோயிலில் பூஜைகள் நிறைய இருப்பதால் 4 நாட்களுக்கு பக்தர்கள் கனகசபை மீது ஏறுவதற்கு அனுமதி இல்லை. அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் அந்த போர்டை எடுக்கச் சொன்னார். ஆனால் நாங்கள் கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்றுதான் வைத்திருக்கிறோம் என்று கூறினோம். தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துதான் போர்டு வைத்திருக்கிறோம்.

திரும்பவும் போர்டை எடுக்க வேண்டும் என்றால், தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவு செய்ய வேண்டும் என்று செயல் அலுவலரிடம் கூறினேன். புதன்கிழமை முதல் பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம். செயல் அலுவலர், தாசில்தார் ஆகியோர் ஒன்று சேர்ந்து போர்டை அகற்றுமாறு கூறினார்கள்.

எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் எடுக்கிறோம் என கூறினோம். போர்டில் எழுதி இருந்ததை அழித்தனர். காவல் துறை அவர்களுக்கு பாதுகாப்பாக வந்தார்கள். செயல் அலுவலர் மீது நாங்கள் புகார் கொடுக்க இருக்கிறோம். பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே போர்டு வைக்கப்பட்டது. எங்களின் பணிகளை செய்ய விடாமல் அதிகாரிகள் தொந்தரவு செய்து வருகின்றனர்.

பக்தர்களின் நலன் கருதி அபிஷேகத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமரக்கூடாது என்றும் போர்டு வைக்க உள்ளோம். அதற்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் தரிசனத்தை விரைவாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பூஜைகள் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் தாமதமாவது தவிர்க்க முடியாது” என்றார்.

இதையும் படிங்க: "திருடுபோன கலைப் பொருட்களை திருப்பிக் கொடுக்க அமெரிக்கா திட்டம்" - பிரதமர் மோடி!

Last Updated :Jun 25, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.