ETV Bharat / state

“கடலூரில் பாஜகவும், திமுகவும் கூட்டணி வைத்து செயல்படுகின்றன” - பகிரங்கமாக குற்றம் சாட்டிய அதிமுக எம்.எல்.ஏ

author img

By

Published : Jul 21, 2023, 7:31 AM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழிதேவன் பாஜகவும், திமுகவும் கூட்டணி வைத்து செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழிதேவன்

கடலூர்: புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை. அடக்கு முறையை எதிர்கொள்ளவில்லை. நிம்மதியாக விவசாயம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் திமுக பொறுப்பேற்ற இரண்டே ஆண்டு காலத்தில் தங்களது வாழ்வாதாரத்திற்காக, உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்த மக்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

மத்திய பாஜக அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி நிறுவனம் மக்கள் விரோத, ஈவு இரக்கமில்லாத ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கவலை இல்லை. என்எல்சியின் சமூக பொறுப்புணர்வு நிதியினை என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான சலுகையும் வழங்கவில்லை. இந்த நிதி ஆண்டில் சுமார் 82 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டு உள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் 94 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டுகின்ற என்எல்சி நிறுவனம், அதனால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கிள்ளி போடும் அளவு கூட மனமில்லை. என்எல்சி நிறுவனம் சில அறிவிப்புகளை அறிவித்திருக்கிறது. அது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்து பேசவில்லை. அதற்கு பாஜக அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள என்எல்சி நிர்வாகமும் தயாராக இல்லை.

முழுக்க முழுக்க என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக விவசாயிகளை வஞ்சித்து தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருந்த விவசாயிகளை கட்சி ரீதியாக திமுக விவசாயிகள், திமுக அல்லாத விவசாயிகள் என பிரித்து அவர்களை என்எல்சிக்கு ஆதரவாக பேச வைத்துள்ளனர். எனவே கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாஜகவோடு திமுக கூட்டணியில் இருக்கிறது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், “என்எல்சி விவகாரத்தில் அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறோம். மேலும் என்எல்சி விவகாரம் குறித்து நாள்தோறும் மீடியாவில் வலம் வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நானே கடுமையாக விமர்சித்து இருக்கிறேன். அவரை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. பல பிரச்சினைகளுக்காக போராடும் அண்ணாமலை இந்த பகுதி விவசாயிகளுக்காக என்ன குரல் கொடுத்திருக்கிறார்?.

இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை? என கேள்வி எழுப்புகிறோம். என்எல்சி பிரச்சினை அந்த சுரங்கப் பகுதியை சுற்றியுள்ள மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. கடலூர் உள்ளிட்ட ஐந்தாறு மாவட்டங்கள் என்எல்சியால் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. என்எல்சி விவகாரத்தில் பாஜகவின் மத்திய அரசும், திமுகவின் மாநில அரசும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை பிரித்தாண்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

இதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகமும் துணை போய்க்கொண்டிருக்கிறது. என்எல்சி விவகாரத்தில் எல்லோருக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வாழ்வாதார தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. இதை விவசாயிகளின் மனம் குளிரும் வகையில் கொடுத்தால் என்எல்சிக்கு பெரிய நஷ்டம் ஏதும் வராது. சில தனி மனிதர்களின் ஆதாயத்திற்காக விவசாயிகள் பிரிக்கப்பட்டு, அவர்களை அரசியலுக்குள் ஈடுபடுத்தி, விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: 'இந்தியாவை இந்துத்துவா நாடாக்குவதற்காக தான் பாஜக பாடுபடுகிறது' - IUML தேசிய தலைவர் காதர் மொய்தீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.