ETV Bharat / state

வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனமாடியதில் தகராறு... ஒருவர் கொலை; கடலூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 11:00 PM IST

crime
வீட்டு விஷேசத்தில் நடனம் ஆடியதை தட்டிகேட்டதால் நடந்த விபரீதம்

Cuddalore murder case: வளைகாப்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடியதை தட்டிக்கேட்ட நபரின் உறவினரைக் கொலை செய்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட 11 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் சரக்கு வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜிந்தா ப்ரீத்தி. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு இவர்களது உறவினர் வளைகாப்பு விழாவிற்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவகுரு, பூமிநாதன், பிரேம்குமார் ஆகியோர் அந்த விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாஸ்கரனின் உறவினர் அஜய் என்பவர் இது சம்பந்தமாக மூன்று பேரை தட்டிக் கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதன் காரணமாக பாஸ்கரன் தரப்பினருக்கும், சிவகுரு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று (செப்.3) அஜய் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் முன் விரோதம் காரணமாக அஜய்யை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அஜய்-யின் உறவினர்கள் பாஸ்கரன் மற்றும் மனைவி ஜிந்தா ப்ரீத்தி உள்பட 10 பேர் பூமிநாதன் தந்தை பத்மநாபன் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் பாஸ்கரன் மற்றும் அவருடன் சென்ற 10 நபர்களை சுத்தியல், கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பாஸ்கரன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த நேதாஜி, மகாலட்சுமி, செல்வக்குமார், அஜித் குமார், அஜய் சிவகுரு மற்றும் திருமுருகன் ஆகிய 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபு தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் கவிதா, மற்றும் உதவி ஆய்வாளர் கணபதி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் பாஸ்கரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமானோர் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின் பாஸ்கரன் உடலை விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் மனைவி ஜிந்தா ப்ரீத்தி கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு, விஷ்ணு, பத்மநாபன், பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 11 பேர் மீது கொலை வழக்கும், திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் முரளி உட்பட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் சிவகுரு, அருண்ராஜ், சுனில், நக்கீரன், விஷ்ணு, பத்மநாபன் ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சனாதனம் வேண்டாம் இந்து அறநிலையத்துறை மட்டும் வேண்டுமா? - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.