ETV Bharat / state

“தேர்தல் வரும்போதெல்லாம் நெருக்கடியை சந்திக்கிறோம்” - என்ஐஏ சோதனைக்கு இஸ்லாமிய அமைப்புகள் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 8:08 PM IST

Whenever in election time is a crisis due to NIA raids Islamic organizations in Coimbatore accused the BJP
பாஜக மீது ஜமாத் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

Jamaat officials accuse BJP: மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் NIA அதிகாரிகள் இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் இத்தகைய நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் சந்திக்க நேர்கிறது, என கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், “கோவையில் கடந்த 16-ஆம் தேதி 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி, சிறுபான்மை சமுகத்தின் மீது அவதூறு கற்பிக்கும் வகையில் அரபி பயிலும் வகுப்பில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை வெளியிட்டனர்.

இந்த செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என்றார். மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கோவையில் உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வையொட்டி சோதனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து என்.ஐ.ஏ அமைப்பானது சோதனைகள் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 16-ஆம் தேதி கோவையில் 22 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். முபீன் படித்த பாடசாலையில் படித்தவர்கள், அவருடன் படித்த மாணவர்களை குற்றவாளிகள் போல பாவித்து அனைவரது வீடுகளில் அத்துமீறி சோதனைகள் செய்வதும், அவர்களின் வீடுகளில் உள்ளவர்களை அதிகாலை 5 மணிக்கு வந்து நெருக்கடிகள் கொடுப்பதும், விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கப்படுவதும் என பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், கோவை கார் வெடிப்பு நிகழ்விற்கு பின்புலமாக இருப்பது யார் என்பது ஒரு பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ள நிலையில், தன் தவறை மறைக்கவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மதப்பதட்டத்தை ஏற்படுத்தியும் குளிர்காய நினைக்கும் அரசியல் தரகர்களின் சூழ்ச்சியாகவே இந்த சோதனையும் உள்ளது என கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு சந்தேகம் எழுப்புகிறது. கார் வெடிப்பு நிகழ்வில் இறந்த ஜமேஷா முபீனுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே என்ஐஏ வின் கண்காணிப்பில் இருப்பவர்கள் அப்படியிருந்தும், இத்தகைய நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. எனில் என்.ஐ.ஏ. சரியாக கண்காணிக்கவில்லையா? அல்லது அவர்கள் உறுதுணையுடன் இது நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தை வலுவாகவும், வீரியமாகவும் முன்னெடுப்பதில் மதரஸாக்கள் பெரும் பங்காற்றின என்பது வரலாறு. ஆனால் இன்று அத்தகைய வரலாற்றில் களங்கம் ஏற்படுத்தவும், இஸ்லாமிய அடையாளங்களை கொச்சைப்படுத்தவும், இஸ்லாமியர்களை பொது மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கும் நோக்கில் மதரசாவில் தீவிரவாத பயிற்சி என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மேலும், வேறொரு வழக்கில் அசாருதீன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ள நிலையில் இந்த கார் சிலிண்டர் வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது என என்.ஐ.ஏ. கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை. ஜெயிலில் உள்ளவர் எப்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இது போன்ற அசம்பாவிதங்கள் என்.ஐ.ஏ.வின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறதா? என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களுக்குரிய வகையில் என்.ஐ.ஏ.செயல்படுவதும், முஸ்லிம்களை குறிவைத்தே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்.ஐ.ஏ. வின் மீதான நம்பகத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழக அரசு தமிழகத்திற்குள் என்.ஐ.ஏ. விசாரணைக்காக வந்தால் தமிழக அரசின் அனுமதி பெறாமல் அவர்கள் வரக்கூடாது என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றி அரசாணையாக வெளியிட வேண்டும். மேலும் பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் இத்தகைய நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் சந்திக்க நேர்கிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓரமாக நிற்க சொன்னவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்; வெளியான சிசிடிவி.. மாணவர்களுக்கு டிசி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.