ETV Bharat / state

ஊருக்குள் அடிக்கடி உலா வரும் யானைகள்.. கட்டுப்படுத்த போராடும் வனத்துறை - கோவை மக்களுக்கு தீர்வு கிடைப்பது எப்போது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 6:54 AM IST

Increased Elephants Entering in Village
ஊருக்குள் புகும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Coimbatore Elephant issue: கோவை வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வரும் நிலையிலும் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்காமல் இருப்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு..

கோவை வனப்பகுதி அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர முயற்சி

கோயம்புத்தூர்: கோவை வனக் கோட்டத்தில் கோயம்புத்தூர், மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் எப்போதும் காணப்படும். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால், அருகில் உள்ள கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிகள் வழியாக யானைகள் வலசை செல்லும்.

அப்போது கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள் அதிகளவில் காணப்படுவது வழக்கம். அப்படி வலசை செல்லும்போது, யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருவதாக கூறப்படுகிறது. அந்த சமயங்களில் மனித - மிருக மோதல்கள் ஏற்பட்டு உயிர் சேதங்களும், பயிர் சேதங்களும் ஏற்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.

தற்போது உயிர் சேதங்கள் ஏற்படாமல் இருக்கவும், காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. யானைகள் வெளியே வருவதும், பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்வதால், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் தினந்தோறும் மாலை முதல் அடுத்தநாள் காலை வரை ஊருக்குள் நுழையும் யானைகளை கண்காணித்து, அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்தில் 2021 - 2022 ஆண்டு வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதம் மற்றும் மனித உயிரிழப்புகளுக்கு 1 கோடியே 59 லட்சமும், 2022 - 2023 வரை 1 கோடியே 64 லட்சமும், நடப்பு ஆண்டில் (2023 - 2024) 1 கோடியே 26 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களே இப்பிரச்னையின் வீரியத்தை உணர்த்துகிறது எனலாம்.

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறும்போது, "கோவை வனக்கோட்டம் முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதி. இங்கு அதிகளவில் யானைகள் உள்ளதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. ஆகையால் யானைகளை கண்காணிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டு யானைகளை கண்காணிக்கின்றனர்.

பல்வேறு ஆபத்துகளுக்கு இடையே வனப்பணியாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். யானைகளை காட்டுக்குள் திருப்பி அனுப்பும் போது திடீரென யானைகள் வனத்துறையினரின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்துகின்றது. இரவு நேரங்களில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஆபத்தான பணியினை மேற்கொண்டாலும், பயிர்கள் சேதமாவதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்திதான் நிலவுகிறது.

விவசாயிகள் வனத்துறையினரின் சிரமங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல பயிர் சேதங்களை தடுக்கவும், மனித மிருக மோதல்களை தடுக்கவும் யானைகள் வனத்தில் இருந்து வெளி யே வராமல் இருக்க வனப்பகுதியை ஒட்டி அகழிகள் அமைக்க வேண்டும். வனப்பகுதிக்குள் நிலவும் தண்ணீர், உணவு பற்றாக்குறையை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்னைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும்" என தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளிலும் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதலைக் குறைக்கும் வகையில், வனத்துறை எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்புகள் குறையவில்லை.

முன்பெல்லாம் யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பயிர்களை மட்டுமே மேயும். ஆனால் இப்போது, காட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மனித குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை நோக்கி யானைகள் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. நெல், கரும்பு, சோளம், வாழை, பாக்கு, தென்னை, கேழ்வரகு, தக்காளி, மா உள்ளிட்ட பயிர்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறது. யானைகளை கட்டுப்படுத்த வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அதிகப்படியான ரோந்து வாகனங்களை பயன்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள காட்டு யானைகளை கண்காணித்து அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த பணிகளை செய்து வருகின்றனர். வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க, கர்நாடகாவில் உள்ளது போல் யானைகளால் சேதப்படுத்த முடியாத வகையிலான பென்சிங் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

அதேபோல், ஏற்கனவே உள்ள அகழிகளை புணரமைக்கவும், புதிதாக அகழிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இனிவரும் காலத்தில் இப்பிரச்னைகள் குறையும்" என்று உறுதியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லீவு உண்டா? இல்லையா?... நெல்லையில் பள்ளி மாணவர்களை குழப்பிய மாவட்ட நிர்வாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.