ETV Bharat / state

நீலாம்பூர் - மதுக்கரை பைபாஸ் சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்றுங்கள் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

author img

By

Published : Feb 26, 2023, 12:43 PM IST

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம்
கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம்

கோவை நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையுள்ள பைபாஸ் சாலையை, ஆறு வழிச்சாலையாக மாற்றக்கோரி இன்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொண்டனர்.

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம்

கோவை அருகே நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை 28 கி.மீ. தூரத்திற்கு உள்ள பைபாஸ் இருவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

பாலத்துரை ரோடு ஜங்ஷன் பகுதியில் தொடங்கிய இந்த நடைபயணம் நீலாம்பூர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது இந்த கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.ஆர். ஈஸ்வரன், 'நீலாம்பூர் பகுதியில் இருந்து மதுக்கரை வரை உள்ள பைபாஸ் சாலை பல வருட காலங்களாக இரு வழிச்சாலையாகவே இருப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நீலாம்பூரை அடுத்த சேலம் பகுதியில் ஆறு வழிச்சாலையாகவும் மதுக்கரையை அடுத்த கொச்சின் சாலை ஆறு வழிச்சாலையாகவும் இருக்கின்ற நிலையில், இடைப்பட்ட பகுதியில் இருவழிச் சாலையாக இருப்பதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, இடைப்பட்ட இந்த பகுதியினையும் ஆறு வழிச்சாலையாக மாற்றினால் தான் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் சாலை விபத்துகள் இல்லாமலும் பயணிக்க இயலும். 1992-ல் இந்த சாலைப்பணிகள் தொடங்கப்பட்ட பொழுது அன்றைய நாட்களில் இருவழிச்சாலை போதுமானதாக இருந்தது.

தற்பொழுது 30 ஆண்டுகள் ஆன நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதை கருத்தில்கொண்டு இதனை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். இது குறித்து ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தானும் இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பி உள்ளேன். இதுபோன்ற பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த நிலையிலும் இதுவரை ஆறு வழிச்சாலையாக இந்த சாலை மாற்றப்படவில்லை. மேலும் இப்பகுதியில் மேம்பாலங்களும் தேவைப்படுகின்றன.

இந்த சாலை கோவை மாநகரத்தின் புறவழிச்சாலையாக உள்ள நிலையில், புறவழிச்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தாமல் மாநகருக்குள் இருக்கின்ற சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம்
கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நடைபயணம்

எனவே, நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையுள்ள சாலையை ஆறு வழிச்சாலையாக உடனடியாக மாற்ற வேண்டும். இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 1990-களிலேயே முடிந்து விட்டது. தற்பொழுது இந்த சாலைகளில் விவசாய நிலங்கள் இல்லை, எனவே, விவசாய போராட்டங்கள் இந்த சாலைக்கு பொருந்தாது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தனியாரிலும் ரேஷன் கடை;இலவச பொருட்கள் கிடைக்காது - மத்திய அரசு புதுஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.