ETV Bharat / state

இந்த ரகசியத்தையா இவ்வளவு நாளா வைத்திருந்தார்? - வானதி சீனிவாசன் கேள்வி

author img

By

Published : Mar 15, 2023, 5:35 PM IST

இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்? - வானதி சீனிவாசன் கேள்வி!
இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்? - வானதி சீனிவாசன் கேள்வி!

நீட் தேர்வு ரகசியத்தைக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது துறையை கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர்: பாஜக மகளிரணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘சுஷ்மா ஸ்வராஜ்’ என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் நியூ சித்தா புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக எப்படி பெண்கள் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக தடைகளைத் தாண்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அடுத்து வரக்கூடிய பெண்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை வழங்கி வருகிறது. பிரதமரின் அரசு, பெண்கள் தலைமை ஏற்கின்ற முன்னேற்றம் என்ற அனைத்து அரசுத் திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி அமைத்து வருகிறது. 8 ஆண்டு காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கழிப்பிடங்கள், பெண்கள் பெயரால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டத்தில் 65 சதவீதம் பெண் பயனாளிகள், சுயதொழில் முனைவோர் திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள் என இதுபோன்ற பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கின்ற திட்டங்களை இந்த விருது வழங்கும் நிகழ்வில் கூறி வருகிறோம்.

பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் அரசியலில் சிறந்த பங்கேற்பாளர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். பாஜகவில் இருந்து யாரேனும் விலகிச் சென்றால் அது தற்போது மிகப் பெரிய விவாதமாகி வருகிறது. கடந்த 2 வாரங்களில் 420 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளனர். சாதாரண தொண்டன் கூட இந்த கட்சியில் இருந்து போகக்கூடாது என்று நாங்கள் நினைக்கின்றோம்.

ஜனநாயகத்தில், குறிப்பாக தேர்தலில் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது. எனவே ஒரு தொண்டன் இந்த கட்சியில் இருந்து செல்வது கூட, எதற்காக செல்கிறார்கள், அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். சில நேரங்களில் அவர்களது தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாகவும், அவர்களது தனிப்பட்ட கொள்கைகள் காரணமாகவும் செல்லும்போது எதுவும் செய்ய இயலாது. தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம்.

குறிப்பாக இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கின்ற மாநிலம் எனக் கூறுகிறோம். உயர் கல்வி என்று கூறும்போது, 12ஆம் வகுப்பைத் தாண்டி அவர்கள் செல்வதுதான். ஆனால் பரீட்சையில் இத்தனை பேர் தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள் என்று கூறினால், அரசாங்கம் இதனை மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்து கொண்டாலும் கூட, அரசுப் பள்ளிகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆனால் அரசுப் பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இலவசமாக புத்தகங்கள், மதிய உணவு, மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டியும் கூட அரசுப் பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேர்வதில்லை? ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு செல்வது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நண்பர் சினிமாவில் நடிக்கலாம்.

அமைச்சராகவும் இருக்கலாம். எனவே அவர்களுடன் நேரமும் செலவிடலாம். அதேநேரம் பள்ளிக்கல்வித்துறையை கவனிக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது என்பது, இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள்? என கேட்கத் தோன்றுகிறது. மக்களை ஏமாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை வேறுபாடு என்பதே கிடையாது.

திமுக அளித்த வாக்குறுதிகளையும், அரசு பொறுப்பேற்றுவிட்டால் இவர்கள் செயல்படுத்துகின்ற செயல்களில் இருக்கின்ற வித்தியாசங்களை நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம். திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி, சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை ஐடி விங் குலைத்து விடும் என்று கூறினால், மாநிலத்தின் முதலமைச்சருக்கு அவர்களுடைய காவல் துறை மீது நம்பிக்கை இழந்துள்ளாரா?

என்றைக்கு ஆளும் கட்சியில் இருக்கின்ற தலைவர்கள், அமைச்சர்கள் அவர்களே வந்து சட்டம் ஒழுங்கு குலைவதற்கு காரணமாக இருக்கின்றனர் என்ற கருத்துக்களை சொல்கிறார்களோ, தன்னுடைய சொந்த அமைச்சர்களை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினால், எதற்காக எதிர்கட்சிகள் மீது பாய வேண்டும்? புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு மிக முக்கியமாக காரணம், திமுகவில் இருக்கின்ற முக்கியமான அமைச்சர்கள், தலைவர்கள், முதலமைச்சரிலிருந்து பேசிய பேச்சுக்கள்தான்.

கோவையில் கூட இரு நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டும். அது நியாயமானதுதான். ஆனால் இது போன்ற பிரச்னைகள் வருவதற்கு என்ன காரணம்? கடந்த 10 ஆண்டுகளாக இல்லாமல் இது ஏன் இப்போது நடக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்றால், முதலில் முதலமைச்சர் அவருடைய பேச்சில் கவனம் வைக்க வேண்டும். மேலும் அமைச்சரவை சகாக்கள் என்ன பேசுகிறார்கள்? அதன் விளைவு எவ்வாறு இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். அதை விட்டு ஐடி விங்கை ஏன் கூற வேண்டும்? ஐடி விங் நினைத்தால் அரசாங்கத்தை தூக்கிப் போட முடியுமா? எனவே முதலமைச்சர் முதலில் அவர்களுடன் இருப்பவர்களிடம் இருந்து அவரையும், அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது ஒரு சிக்கலை உருவாக்கும். ஆனால் இதையெல்லாம் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு, கடந்த வாரம் ஜேபி நட்டா கிருஷ்ணகிரி வந்தபோது, தங்கள் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து, இதுபோன்று விரும்பத் தகாத விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.

எனவே வருகின்ற காலத்தில் இவை அனைத்தும் சரியாகிவிடும் என நம்புகிறோம். கோடை காலம் வரும் முன்பே கேரள அரசாங்கத்திடம் பேசி, சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் தற்போது கோடை காலம் வரும் முன்பே அங்கு நீரின் மட்டம் குறைந்துள்ளது. இது முழுக்க முழுக்க இவர்களுடைய சுயநலத்திற்காக, எந்த பிரச்னையையும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக கோவையில் ஏதேனும் பிரச்னை என்று சொன்னால், எந்த கவனத்தையும் கொடுப்பதில்லை.

இன்னும் கோவை மீது உள்ள வெறுப்பு அவர்களுக்கு தீரவில்லை என்று நினைக்கிறேன். ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த தடைச் சட்டம் கொண்டு வருகின்றபோது, நாளை நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக்கூடிய சட்டமா? என்பதைத்தான் ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்விகளை நாளை நீதிமன்றம் கேட்டால், தமிழ்நாடு அரசு அல்லது பெரியார் திராவிட கழகம் ஆகியவை சாம்பல் அனுப்புமா?

இது போன்ற எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை, ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் இதனை கௌரவப் பிரச்னையாக பாராமல், சட்ட ரீதியாக கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் புலம்பெயர் தொழிலாளர்கள் உடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.