ETV Bharat / state

“ஆளுநர் குறித்து ஆபாசமாக பேசுவதற்கு ஆர்.எஸ்.பாரதிக்கு திமுகவில் பதவி” - வானதி சீனிவாசன் காட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 8:31 AM IST

Vanathi Srinivasan Press meet
வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan Press meet: மோடி மகள் திட்டத்தின் கீழ் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரக்கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார்.

வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹாலில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரக் கூடிய 100 பெண் குழந்தைகளுடன் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தீபாவளி கொண்டாடினார். மோடி மகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், ‘கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மோடியின் மகள் என்ற திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதால், தீபாவளி கொண்டாட்டம், பரிசுகளுடன், “குட் டச்” (Good Touch) “பேட் டச்” (Bad Touch) குறித்த வகுப்புகள் எடுக்கப்படுகிறது. நடிகைகளை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “டீப் ஃபேக்” (deep fake) புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலங்கள் மட்டுமின்றி, சாதாரணப் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது, இதனால் அவமானப்படுவது நாம் அல்ல. சரியான முறையில் உடனிருப்பவர்களுடன் பேசி, மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். காவல் துறையில் தொழில் நுட்பக் குழுக்களைப் பலப்படுத்த வேண்டும். சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசுடன் மகளிர் அணித் தலைவர் என்ற முறையில் பேசி உரிய முயற்சி எடுப்பேன். அதேபோல, தங்களுக்கு நடைபெறும் குற்றங்களை 50 சதவீதம் பெண்கள் வெளியில் சொல்வதில்லை என்பதால், குற்றவாளிகளுக்கு தைரியம் கிடைக்கிறது.

கால விரயம் என்பதாலும் பெண்கள் செல்லுவதில்லை. மிசோரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பாஜக போட்டியிடுகின்றது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆதரவு உயர்ந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இனக் குழுக்களுக்கு இடையே நடக்கும் பிரச்னைகளுக்கு பாஜக காரணமில்லை என அவர்களுக்குத் தெரியும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின், பட்டியல் இன மக்களின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வேங்கை வயல் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது வரை தீர்வு இல்லை. பட்டியல் இன மக்கள் பாதுகாப்புக்கு திமுக பங்களிப்பு என்பது இல்லை.

தமிழக அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத துறைதான் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆளுநரைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி அநாகரிகமாக பேசுவது தொடர்கின்றது. அவரது ஒவ்வொரு ஆபாசப் பேச்சுகளை திமுக தலைமை ரசிக்கின்றது. தொழில் துறையினருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மின்சாரப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

பாஜக, தொழில் துறையினருக்கு ஆதரவாக இருக்கும். ஆளும் கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேச வேண்டும் என தமிழக அரசில் இருப்பவர்கள் நினைக்கின்றனர். அது நடக்காது. உங்கள் சித்தாந்தங்களை அவர் பேச வேண்டும் என நினைக்கக் கூடாது. அவர் சித்தாந்தை அவர் பேசுகிறார். உங்கள் சித்தாந்ததை நீங்கள் பேசுங்கள். ஆளுநரின் மாண்பைக் குறைக்கும் வகையில் செயல்படக் கூடாது” என்றார்.

இதையும் படிங்க:சனாதன ஒழிப்பு விவகாரம்; "தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு" - அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.