ETV Bharat / state

சின்னக்கல்லாறு அஞ்சலகமும் மலைக்கிராம மக்களின் சிறுவாட்டு சேமிப்பும்!

author img

By

Published : Aug 23, 2021, 7:23 PM IST

சின்னக்கல்லாறு அஞ்சலகம்
சின்னக்கல்லாறு அஞ்சலகம்

எங்களோட எல்லா நல்லது கெட்டதுலயும் இந்த போஸ்டாபிஸ் கூட இருந்திருக்கு. தேயிலை கிள்ளி சம்பாதிச்ச பணத்தை, அதுல தான் சேமிச்சு வைக்குறோம். சவலைப் பிள்ளைங்கிறதுக்காக அதை வேண்டான்னா சொல்ல முடியும். அந்த போஸ்ட் ஆபிஸ் அப்படியே இருக்கட்டுயா. முடிஞ்ச அதை முன்னேத்திக் கொடுங்க. சின்னக்கல்லாறு தேயிலை தோட்ட தொழிலாளர்ளின் இந்த கோரிக்கைக்கான காரணமென்ன. வாருங்கள், வால்பாறை தாண்டி கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வரலாம்.

கோயம்புத்தூர்: வகிடெடுத்து சீவிய பள்ளிக் குழந்தைகளின் தலை போல நேர்த்தியான இடைவெளியுடன் மலைவெளியெங்கும் நீண்டு கிடக்கும் வால்பாறைத் தேயிலைத் தோட்டங்கள், சமவெளி மக்கள் அறியாத பல ஆச்சரியக் கதைகளை கொண்டிருக்கிறன.

அப்படியான சுவாரஸ்யத்தில் ஒன்று, சின்னசிரபுஞ்ஜியும் என அழைக்கப்படும் சின்னக்கல்லாறு அஞ்சலகத்தின் கதை. பச்சை பட்டு போர்த்தி படர்ந்திருக்கும் மலைத்தொடரில், வேண்டும் போதெல்லாம் மேக மகள் வந்து தன் பஞ்சுக்கரங்களால் வந்து விளையாடும் அழகுடன் விரிந்து கிடக்கிற வால்பாறையிலிருந்து 14 கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறது, சின்னக்கல்லாறு டேன்டீ (TANTEA) தேயிலைத் தோட்டம்.

இந்தியா - இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் 1967ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய மலையகத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக, தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (TANTEA) தொடங்கப்பட்டது. அதன் மூலம் நீலகிரி, வால்பாறை பகுதிகளில், வனத்துறையினரின் இடத்தில் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவான தேயிலை தோட்டங்களில் ஒன்று சின்னக்கல்லாறு டேன்டீ தேயிலைத் தோட்டம்.

செய்தி சொல்லும் தோழன்

முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு குடியமர்த்தப்பட்டனர். அவர்களின் பயன்பாட்டுக்காக 1970 ஆம் ஆண்டு, சின்னக்கல்லாறு பகுதியில் ஒரு தபால் நிலையம் தொடங்கப்பட்டது. எஸ்டேட்டில் கொட்டைகைப் போன்ற வீட்டில் வசித்து வந்த தோட்டத்தொழிலாளர்களுக்குள், அங்குள்ள கொட்டகை ஒன்றில் தொடங்கப்பட்ட தபால் நிலையம் பல மாற்றங்களை விதைத்தது.

ஆரம்பத்தில் செய்திகளை மட்டும் சுமந்து வந்த தபால் நிலையமும் அதன் ஊழியர்களும், நாளடைவில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிப்போனார்கள்.

இலங்கை மலையகத் தோட்டங்களில் பணி புரிய ஆங்கிலேயர்கள் காலத்தில் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் வாரிசுகள் தாயகம் திரும்பிய போது, அவர்களை இங்குள்ள சொந்தங்களுடன் இணைத்து வைத்திருந்தது சின்னக்கல்லாறு தபால் தந்தி ஆபிஸ். அப்போது தூரத்து சமவெளிப் பகுதிகளில் வசித்து வந்த சொந்தங்களின் சுக துக்கச் செய்திகளை தந்திகளாக சுமந்து வந்து சேர்த்தது தபால் நிலையம். இதனால் தோட்டத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் அது பிரிக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.

சின்னக்கல்லாறு வாசிகள், ஏதாவது பொருள்கள் வாங்க வேண்டுமென்றாலும் அடர்ந்த காட்டுப்பாதையில் காட்டுயிர்களின் நடமாட்டங்களைக் கடந்து வால்பாறை சந்தைக்குத் தான் வர வேண்டும். சிரபுஞ்ஜிக்கு அடுத்து அதிகம் மழை பொழியும் இடமாக சின்னக்கல்லாறு இருப்பதால், மழையின் பாதிப்புகளும், அதனால் ஏற்படும் மின் வெட்டுகளும் இம்மக்களுக்கான கூடுதல் இடர்.

உறவினராய் தபால்நிலையம்

நாள்முழுவதும் தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காக, தோட்ட நிர்வாகம் கிள்ளிக் கொடுக்கும் சம்பள பணத்தில் தங்களின் செலவு போக மீதிப் பணத்தை, எஸ்ட்டேட் வாசிகள் சிறுவாட்டு காசாக தபால் நிலையத்தில் தான் சேமித்து வைக்கின்றனர். இருக்கும் போது சேமிக்கவும் தேவைப்படும் போது வாங்கிக் கொள்ளவும் உறவினர் போல உதவியிருக்கிறது சின்னக்கல்லாறு தபால் நிலையம்.

"இந்த போஸ்ட் ஆபிஸ் ரொம்ப பயனுள்ளதா இருக்கு. காரணம் என்னனு கேட்டீங்கனா. இங்கே தொழிலாளர்கள் 100 பேருக்கு மேல இருக்காங்க அவங்களுக்கு சம்பள பணத்தை போட்டு எடுக்க இது வசதியா இருக்கு. அதே மாதிரி மெயில், எங்களுக்கு டவர் பிரச்னை இருக்கிறதால இந்த தபால் ஆபிஸ் தான் எல்லாத்துக்கும் உதவியா இருக்கு என்கிறார் சின்னக்கல்லார் வாசியான, சஞ்சிவ்நாதன்.

காலம் சமவெளியில் மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மாற்றம் மலையகங்களையும் எட்ட முயற்சித்திரு்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரி படித்து வேலைக்காக வேறு இடம் புலம் பெயரத் தொடங்கினர். அவர்கள் தங்கள் பெற்றோர்களைத் தொடர்பு கொள்ள செல்போன்களும் வந்தன. ஆனால் மலைமகளின் பிரம்மாண்டத்திற்குள் எந்த தொலைத்தொடர்பும் இன்றும் அவர்களை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அதனாலேயே அன்றிலிருந்து இன்று வரை தபால் நிலையம் அவர்களுடன் ஒன்றிணைந்து விட்டது.


சில ஆண்டுகளுக்கு முன்பு 300 குடும்பங்கள் இருந்த சின்னக்கல்லாறு எஸ்டேட்டில் இன்று 150 குடும்பங்களே உள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, மத்திய அரசு தபால் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக தெரிகிறது. அரசின் முடிவு இந்த மக்களை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது.

"இந்த போஸ்ட் ஆபிஸ் இருக்கிறது எவ்வளவோ உதவியா இருக்கு. பத்துரூவா காசுனாலும் நாங்க சேர்த்து வைக்க உதவியா இருக்கு. எங்களோட எல்லா நல்லது கெட்டதுலயும் இது இருந்திருக்கு. அதனால இதை யாரும் எதுவும் செஞ்சுராதீங்க. அது இங்கே இருக்கட்டும். வேணும்னா இன்னும் டெவலப் பண்ணிக் கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்" என்கிற வளர்மதியின் வார்த்தைகளில் தெரிகிறது சின்னக்கல்லாறு தொழிலாளர்களின் வாழ்க்கையில் தபால் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு.

சமவெளியிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் மலைப்பிரதேசங்கள் தனக்கென ஒரு தனித்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறன. ஆதிகுடிகளுக்கு மட்டும் இல்லை, மலைப்பகுதியில் குடியேற்றப்பட்ட சமவெளி குடிகளுக்கும் அந்த தனித்த வாழ்க்கை பொருந்தும்.

சின்னக்கல்லாறு தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஆழ வேர்பதித்திருக்கும் தபால் நிலையத்தை மாற்றுவதென்பது குழந்தையின் கையிலிருக்கும் திண்பண்டத்தை பிடுங்குவதற்கு சமம். அரசாங்கம் அதைச் செய்யாமல் இருக்கட்டும்.

விதிகள் கொஞ்சம் சாமானியனர்களுக்காகவும் சாய்ந்து கொடுக்கட்டுமே!

இதையும் படிங்க: இயற்கையோடு தற்சார்பு வாழ்க்கை வாழும் "இதய வனம்" இளங்கோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.