ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Mar 11, 2023, 10:31 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் உரை
முதலமைச்சர் ஸ்டாலின் உரை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜவுளிப்பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை: விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது, 1,000 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்க்கு உயர்த்தப்பட்ட கட்டணத்ததில் 70 காசுகள் குறைப்பு, கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கைத்தறியாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் ஆடை உற்பத்தி நெசவாளர்களுக்கு உதவி செய்வதை எனது கடமையாக கருதுகிறேன். திமுக துவங்கிய காலம் முதல் நெசவாளர் துயர் துடைக்கும் இயக்கமாக இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவி செய்துள்ளது. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

கொரோனா பெருந்தொற்று, நூல் விலையேற்றம் என்ற தாக்குதலில் சிக்கி இருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது. நெசவாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். சிறந்த நெசவாளர், சிறந்த ஏற்றுமதியாளர், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி, கைவினைப் பொருட்கள் காட்சியகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வேட்டி , சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இவை எல்லாம் 20 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தான். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர். செந்தில்பாலாஜி ஒரு டார்கெட் அமைச்சர். தனக்கான இலக்கை உருவாக்கி கட்சிக்காகவும், ஆட்சிக்காகவும் அந்த இலக்கை அடைந்து காட்டுவார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா மின்சாரம் கைத்தறிகளுக்கு 300 அலகுகளாகவும், விசைத்தறிகளுக்கு 1000 அலகுகளாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.53 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும். இதை செலவாக நினைக்கவில்லை. நெசவாளர்கள் புத்துயிர் பெறவும், அதிகமாக உற்பத்தி செய்யவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மின் கட்டண குறைப்பால் நெசவாளர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.தொழிலை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. 5 லட்சம் விசைத்தறிகளில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளர்களை காக்கும் கடமை அரசிற்கு உண்டு.

நெசவாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நூல் விலையை கட்டுப்படுத்த உறுதியாக நடவடிக்கை எடுப்போம். அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான துணிகள் கொள்முதல் செய்தல், அரசின் நிபுணர் குழுக்களில் நெசவாளர்கள் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்டவை முறையாக பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக உறுதியாக நிறைவேற்றப்படும் .ஜவுளித்துறைக்கு ஆணி வேராக நெசவு தொழில் உள்ளது. நெசவு தொழிலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேற்கு மண்டலத்தில் அடுத்ததாக ஒரு ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் தறி தொழிற்சாலையை தனியிடத்தில் அமைத்து சலுகைகள் வழங்கப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அரசு மீது மக்களுக்கு இருக்கும் மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி மூலம் அந்த நிலைமை மாறியுள்ளது.

மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு இருப்பதாக மார்த்தட்டி கொண்ட அதிமுக என்ன சாதனை செய்துள்ளது? தொழில் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. சிறு, குறு நடுத்தர தொழில்களை அரசு ஊக்குவித்து வருவதால், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் சிறந்த அமைதியான மாநிலமாக உள்ளது. இது சிலரது கண்களுக்கு பொறுக்கவில்லை.

ஒற்றுமையாக மக்கள் அனைவரும் வாழும் மாநிலம் தமிழ்நாடு. அதை வதந்தி, பொய்களால் சிலர் சிதைக்க பார்க்கிறார்கள். வதந்தி, பொய்களால் களங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அவை எழுந்த வேகத்தில் அமுங்கி விடுகின்றன. மக்களை திசை திருப்ப தந்திரங்களாக பொய்களையும், வதந்திகளையும் பயன்படுத்துகின்றனர்.

என் பொது வாழ்க்கையில் இதுபோன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்து விட்டேன். இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் துற்றட்டும். நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என கூறினார். விழாவில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, காந்தி, முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: நாட்டிலேயே 3ஆவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் உள்ளது - அமைச்சர் தா.மோ. அன்பரசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.