ETV Bharat / state

ரோந்து வாகனங்களில் அதிநவீன கேமராக்கள்.. குற்றச் செயல்களை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல்துறை தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 4:10 PM IST

கோவையில் ரோந்து வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்
கோவையில் ரோந்து வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்

Coimbatore Police: கோவையில், ரோந்து பணியில் ஈடுபடும் வாகனங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமாரா பொருத்தப்பட்டு, காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழங்கினார்

காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அளித்த பேட்டி

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல்துறையில் உள்ள ரோந்து வாகனங்களில், அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழங்கும் நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று (டிச.1) நடைபெற்றது. எல் & டி குழுமம் சார்பில் வழங்கப்பட்ட இந்த கேமரா, காவல் துறையின் ரோந்து வாகனத்தின் முன்புறம், பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது.

அதில் 2 டிபி ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டு, காவல் கட்டுப்பாடு அறையுடன் இணைத்து வீடியோ காட்சிகளைப் பார்க்கும் வசதியும், வாகனத்தில் ஒரு டிஸ்பிளேவும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகானங்களுள் முதற்கட்டமாக 18 வாகனங்களை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் காவல் நிலையங்களுக்கு வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த அதி நவீன கேமராக்களில் IR விஷன், ஜிபிஎஸ் வசதிகள் உள்ளன. மேலும், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் 45 நாட்களுக்கு சேமிக்கும் திறன் உள்ளது. அடுத்த கட்டமாக காவல்துறையின் இருசக்கர ரோந்து வாகனங்களிலும், இந்த கேமராக்கள் பொறுத்த ஆலோசிக்கப்பட உள்ளது.

தற்போது கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில், 11 ஆயிரம் கேமராக்கள் இயக்கத்தில் இருக்கிறது. அதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறைந்து இருக்கிறது. குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பதற்கும், இந்த கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக இருக்கிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டில் மட்டும் ஆன்லைன் மோசடி தொடர்பாக, 2 ஆயிரத்து 500 புகார்கள் வந்துள்ளது. அத்தகைய மோசடியில் ஈடுபடக்கூடி மர்ம கும்பல், ஐடி துறையில் பணிபுரியும் மக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

கேரளா மாநிலத்திலிருந்து கோவை மாவட்டத்திற்குள், மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுக்கும் விதமாக 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரக் கண்காணிப்பு நடைபெறுகிறது. நக்சல் தடுப்பு குழுவினர் மலைக் கிராமங்களில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, கோவை மாவட்டம் முழுவதும் நாள்தோறும் புகையிலை, குட்கா சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை குறி வைத்து சில்லறை வியாபாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், திரைப்பட பாணியில் தினந்தோறும் புகையிலை வியாபாரிகள் ஒரு குறியீட்டுடன், குறிப்பிட்ட அடையாளத்துடன் வந்தால் தான் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். இதுபோன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனை குறித்து, காவல்துறைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் தகவல்கள் கொடுப்பதாகவும், அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் முன்விரோதம்.. சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.