ETV Bharat / state

பழமையான குட்டையை ஆக்கிரமிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் - மீட்கும் முயற்சியில் அப்பகுதி மக்கள்!

author img

By

Published : Aug 6, 2021, 3:21 PM IST

கோவை அருகே 100 ஆண்டுகள் பழமையான குட்டையை, வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியில், ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஈடுபடுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயத்தின் முக்கிய நீர் ஆதாரமான இக்குட்டையை மூடக் கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு...

பழமையான குட்டையை  மூடும்  ரியல் எஸ்டேட் அதிபர்கள்
பழமையான குட்டையை மூடும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்

கோவை : கணியூர் ஊராட்சிக்குட்பட்ட வேட்டைக்காரன்குட்டை குமார் நகர்ப் பகுதியில், சுமார் 100 ஆண்டுகள் பழமையான மணியகாரர் குட்டை உள்ளது.

இக்குட்டையைக் கடந்த இரு நாள்களாக அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டு மனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்களும், கணியூர் ஊராட்சி நிர்வாகமும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்ப்புகளைத் தாண்டி, குட்டையை வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கணியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், காவல் துறைக்குப் புகார் தெரிவித்தார்.

நூறு ஆண்டுகள் பழமையான குட்டை

இதுகுறித்து கணியூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி கூறுகையில், 'மணியகாரர் குட்டை என்பது நூற்றாண்டுகள் கடந்த குட்டையாகும். இதனை நம்பி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்குட்டை தங்களுக்குச் சொந்தமானது என சிலர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி சூலூர் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் குட்டையானது நூறு ஆண்டுகள் பழமையானது. தனது மூதாதையர் இந்த நிலத்தை நில உச்ச வரம்புச் சட்டத்தின்கீழ், அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் குட்டையைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்தக் குட்டை காரணமாக அமைகிறது.

எனவே, குட்டையை வீட்டு மனையாக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

சூலூர் ஒன்றிய துணைத் தலைவர் சுரேந்தர் மோகன் கூறுகையில், 'சூலூர் பகுதி நிலத்தடி நீர் மட்டம் என்பது 1500 அடிக்குக் கீழே சென்றுவிட்டது.

இந்தப் பகுதியில் உள்ள மணியகாரர் குட்டை நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க காரணமாக உள்ளார். இதனை சிலர் வீட்டு மனையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தடுக்கப்பட வேண்டும் இல்லையெனில், வரும் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 2 ஆயிரம் அடிக்குக் கீழ் சென்றுவிடும்.

ஒருவேளை இக்குட்டை பகுதி இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டு குட்டையை மேம்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இப்பகுதி விவசாய நிலங்களைக் காப்பாற்ற முடியும்' என்றார்.

பழமையான குட்டையை மூடும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்

மக்கள் கோரிக்கை

இலவச வீட்டு மனை பட்டாவாக இந்த இடம் வழங்கப்பட்டிருந்தால் 10 ஆண்டுகளுக்குள் இந்த இடங்களில் கட்டுமானப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு ஏதும் நடைபெறாமல், தற்போது ரியல் எஸ்டேட் செய்வோர் இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் குழந்தை - முதலமைச்சரின் உதவியை நாடும் பெற்றோர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.