ETV Bharat / state

கோவையில் போலி டிராவல்ஸ் நடத்தி மோசடி; 19 கார்கள் மீட்பு!

author img

By

Published : Feb 14, 2023, 12:56 PM IST

கோவையில் போலி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி
கோவையில் போலி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி

கோவையில் போலியான டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 19 கார்களை போலீசார் மீட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவையில் போலியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தவர்களிடம் இருந்து திருடப்பட்ட கார்கள் மீட்கப்பட்டன. இது குறித்து கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் பகுதி வீஜிஎம்(VGM) டிராவல்ஸ் என்ற நிறுவனம் போலியாகத் துவங்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாதாமாதம் ரூ.10,000 கொடுக்கிறோம், எங்களுக்குப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடுவதற்கு கார் தேவைப்படுகிறது என்று கூறி 30க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து வாகனங்களை ஏமாற்றிப் பெற்றுள்ளனர்.

அதற்காக சில காலம் மட்டும் மாத வாடகை தொகையும் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டு அந்த நிறுவனத்தையும் காலி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அவர்களிடம் இருந்து 19 கார்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் 3 கார்கள் மீட்கப்படவுள்ளது. தற்போது இந்த கார்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இது போன்று மோசடி செய்து பெற்ற கார்களை வெங்கடேஷ் என்பவர் போலியாக புத்தகம் தயாரித்து வேறொரு நபருக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அதுவும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கு பின்புறமாக செயல்பட்டவர்கள் யார்? எப்படி போலியாக RC புத்தகம் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்ததெல்லாம் அடுத்தடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். எனவே இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது போன்று மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டால், உடனடியாக குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள். தங்களுடைய பணமும் வீண் போகாது. மேலும் இதுபோன்ற பல்வேறு மோசடிகள் தொடர்ந்து கோவையில் நடைபெற்று வருகிறது எனவே பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் கோவை மாநகரில் நடைபெற்ற 2 கொலை சம்பவங்கள் தொடர்பாக நான் கருத்து கூற முடியாது இருந்த போதும் கோவை மாவட்டத்தில் உள்ள 13 எல்லை சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியின் போது கோயில்களில் மக்கள் அமைதியாகத் தரிசனம் செய்ய போதிய வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 34 சோதனைச் சாலைகள் கண்காணிப்பு பணியில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கஞ்சா சாக்லேட் பொறுத்தவரை வட மாநிலத்திலிருந்து தான் வருகிறது. கான்பூரில் ஒரு தொழிற்சாலையும் கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சா சாக்லேட்டுகள் சம்பந்தமாக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பெரியநாயக்கன்பாளையம், சூலூர் போன்ற பகுதிகளில் பறிமுதல் செய்துள்ளோம். குறிப்பாக சூலூரில் கிடைக்கப் பெற்ற 250 கிலோ கஞ்சா சாக்லேட் துப்பு கொடுத்தது ஒரு பிரபல கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தான். அதன் அடிப்படையில் தான் இந்த 250 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே வட மாநில தொழிலாளர்களையும் தொடர்ந்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். அந்த பகுதிகளில் இருந்து தான் அதிக அளவில் கஞ்சா சம்பந்தப்பட்ட போதை பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.