ETV Bharat / state

மரப்பாச்சி பொம்மை முதல் விக்ரம் லேண்டர் வரை…கோவை பூம்புகாரில் கண் கவரும் கொலு பொம்மை கண்காட்சி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 3:34 PM IST

கோவை பூம்புகாரில் கண் கவரும் கொலு பொம்மை கண்காட்சி
கோவை பூம்புகாரில் கண் கவரும் கொலு பொம்மை கண்காட்சி

Navaratri Dolls Exhibition: நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோவை பூம்புகாரில் கண் கவரும் கொலு பொம்மை கண்காட்சி

கோயம்புத்தூர்: இந்து மத மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஒன்பது நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களுக்காக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சமாக பல்வேறு மக்கள் அவர்களது இல்லங்கள் மற்றும் கோயில்களில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர்.

நாள்தோறும் மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடுகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, ஒன்பது நாட்களும் கோலாகலமாக இருக்கும். முன் காலத்தில் இந்த கொலுவில் சாமி சிலைகள் வைத்தும், புராணக் கதைகள், படி சிலைகளை அடுக்கி வைத்தும் வழிபட்டு வந்தனர்.

பின்னர் நமது பாரம்பரிய பண்டிகைகள், இல்ல விழாக்களை குறிக்கும் பொம்மைகள் இடம் பெற்றன. நாளடைவில், பல்வேறு பொம்மைகள் இந்த கொலுவில் இடம் பெற்று தற்போது கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் நவராத்திரி விழா அக்டோபர் 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை பல்வேறு இடங்களில் துவங்கி உள்ளது.

10 நாள் கண்காட்சி: இந்நிலையில், கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (செப் 29) முதல் துவங்கியது. அக்டோபர் 25ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இங்கு பல்வேறு சாமி சிலைகள், பண்டிகைகளையும் இல்ல விழாக்களையும் குறிக்கும் விதமான பொம்மைகள் என பல்வேறு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பெருமாள் சிலைகளும் இக்கடவுள்களின் அவதாரங்கள், விநாயகர், முருகன் போன்ற சிலைகள் ஏராளமானவை இடம் பெற்றுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொலுவில் விக்ரம் லேண்டர்: தற்பொழுது புது வரவாக இந்திய விஞ்ஞானிகளால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3, விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவர் மாதிரிகள் கொலுவில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திராயன் விலை செட்டின் விலை ரூ.2,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற கொலு பொம்மைகளின் விலை 110 ரூபாயில் இருந்து துவங்குகிறது. மேலும், இந்நாட்களில் பொருட்களுக்கு ஏற்ப தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என விற்பனையாளர்கள் கூறினர்.

இது குறித்து பேசிய பூம்புகார் விற்பனையகத்தின் மேலாளர் ரொனால்ட், “இந்த ஆண்டு கொலு கண்காட்சி அக்டோபர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சி ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும். இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக சந்திராயன் செட், மருதமலை கோயில் மாதிரி, தங்க முலாம் பூசப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள், சீர் வரிசைகள் செட் என பல வகைகள் அமையப் பெற்றுள்ளது.

ஏகாம்பரனார் மற்றும் நடராஜர் சிவகாமி தேவியோடு இருப்பது போன்ற செட், முதல் முறையாக வந்துள்ளது. இதன் விலைகள் 110 ரூபாயில் துவங்கி ரூ.32 ஆயிரம் வரை உள்ளது. இதனை டெலிவரி செய்வதற்கு Porter என்ற செயலியுடன் இணைந்து டெலிவரி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய பார்வையாளரான சுமித்ரா, “நவராத்திரியில் கொலு வைப்பதற்காக கொலு பொம்மைகளை காண வந்துள்ளோம். இங்கு வந்து பார்த்தால் எதனை வாங்க வேண்டும் என்றே தெரியாத வண்ணம் உள்ளது. எதனைப் பார்த்தாலும் அள்ளிக் கொண்டு செல்வதுபோல் உள்ளது. விலைகளும் சரியாகத்தான் உள்ளது” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய மாணவி நிவேதா ரமேஷ், “கொலு வைப்பதற்கான அடிப்படைகூட எங்களுக்குத் தெரியாது. பின்னர் சமூக வலைத்தளங்கள், யூடியூப் போன்றவற்றை பார்த்து கொலு வைப்பது பற்றி கற்றுக் கொண்டேன். மேலும், நவராத்திரி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும், அதன் மூலமாக அறிந்து கொண்டு கொலு வைப்பதற்காக கொலு பொம்மைகளை வாங்க வந்துள்ளேன்.

நான் யோசித்ததை விட இங்கு பிரமாண்டமான பொம்மைகள் உள்ளது. விலையும் பொம்மைகளுக்கு தகுந்தார் போலத்தான் உள்ளது. இங்குள்ள அனைத்து பொம்மைகளும் உயிர் உள்ளது போன்று மிகவும் தத்ரூபமாக உள்ளது. இந்தக் கொலு வைத்து வழிபடுவது என்பது சாமியை வணங்குவதற்காக மட்டுமல்ல, அனைவரையும் ஒன்றிணைக்கத்தான். எனவே அனைவரும் இதனை கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 Thousand Ruppes : இன்றுடன் காலாவதியாகும் ரூ.2ஆயிரம் நோட்டுகள்! கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.