ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 10:29 PM IST

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதுகு தண்டுவடத்தில் வலி, அதிக மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப கருவிகளின் செயல்பாடு ஆகியவற்றின் துவக்க விழா நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கோவை அரசு மருத்துவமனையில் 13.75 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மருத்துவ கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணம், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் PET - CT SCAN கருவி, 1.5 கோடி ரூபாய் செலவில், இருதய ரத்தக் குழாய் அடைப்புகளை ஸ்டென்ட் வைத்து சரிபார்க்க பயன்படும் OCT எனப்படும் கருவி, இருதயவியல் துறை கேத் லேப் ஆவியவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், "கோவையில் பல்வேறு திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, நான்கு மாதங்களில், 500 மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ள 49 மையங்களில் தலா, 4 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், பிற தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதில்லை. மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அனைத்து பகுதிகளிலும் உள்ளது.

இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைத் தடுக்கவே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஆய்வக நுட்பனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன என கூற முடியாது. காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போது, 1,021 டாக்டர்கள், 983 மருந்தாளுனர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்கள், 2,222 கிராம சுகாதார செவிலியர்கள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்புவதில் ஏற்படும் சிக்கலுக்கு வழக்குகளே காரணம்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "செந்தில்பாலாஜிக்கு பல்வேறு உபாதைகள் உள்ளன. கால் மறத்து போகிறது. முதுகு தண்டுவடத்தில் வலி, அதிக மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் உள்ளன. தொடர்ச்சியாக அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னும், 3, 4 தினங்களில், பரிசோதனைகள் நிறைவடையும். அவர் எத்தனை நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதை டாக்டர்கள் தான் முடிவு செய்வர். செந்தில் பாலாஜிக்கு இரு கால்களும் மறத்து போவதால் பிசியோதெரபி மேற்கொள்ள வேண்டும். நடந்தால், மயக்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் உள்ளதால், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

தொடர்ந்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்ட போது, "விஜயகாந்த் நல்ல உடல்நிலையில் உள்ளார். சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசினேன். அவருக்கு ஏற்கனவே டிரான்ஸ்பிளான்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல், தொடர் இருமல் உள்ளது. அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, தேவைப்படும் போது ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்திய புகார்; கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிரடி விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.