ETV Bharat / state

கோவையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என். நேரு

author img

By

Published : May 9, 2022, 7:19 AM IST

சிறுவாணி குடிநீர் முதல்வர் முக.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு கடிதம் - அமைச்சர் கே.என். நேரு
சிறுவாணி குடிநீர் முதல்வர் முக.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு கடிதம் - அமைச்சர் கே.என். நேரு

கோவையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சிறுவாணி குடிநீர் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை : மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59 கோடி மதிப்பில் 9 முடிவுற்ற பணிகள் மற்றும் 49.62 கோடி மதிப்பில் 263 புதிய திட்டங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் ஓராண்டு சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கோவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றாலும், தற்பொழுது 96 மாநகர மன்ற உறுப்பினர்களும் 7 நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. சிறுவாணி நீர் குறித்து கேரள முதல்வருக்கு மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார், கோவையில் தண்ணீர் பஞ்சம் இல்லாத படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .மேலும் கோவையில் 591.44 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்" என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு, "கோவை மாநகராட்சியில் 591 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு வருட காலத்திற்குள் பில்லூர் குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக நடைபெறுவதாக சிலர் கூறிய நிலையில், அதனைப் பார்வையிட்டு விரைந்து முடிக்கும்படி தெரிவித்துள்ளோம்.

சிறுவாணி அணை தொடர்பாக கருணாநிதி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் நீர் இன்னும் தரப்படாத நிலையில் கேரள முதலமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. எனவே இங்குள்ள அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற முயற்சி எடுக்கப்படும்.

மாநகராட்சியில் செய்யப்படாத பணிகள் கொடுக்கப்பட்டதாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கோவை மாநகராட்சியில் 5 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் 145 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை கோவை மதுரை போன்ற மாவட்டங்களில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என நேரு தெரிவித்தார்.

மேலும் வாலாங்குளத்தில் 67.86 கோடி மதிப்பில் சீர்மிகு நகரம் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்கு உட்பட ரேவதி நகர் பகுதியில் 2.5 கோடி மதிப்பில் இருபத்தி நான்கு மணி நேர குடிநீர் விநியோகத் திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க : அன்னையர் தினத்தில் 'இட்லி பாட்டிக்கு' வீடு பரிசளித்த ஆனந்த் மகேந்திரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.