ETV Bharat / state

வடமாநிலத்திற்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு.. ஓடும் பேருந்தின் பின் பக்கம் ஏறி துணிகர கொள்ளை

author img

By

Published : Jun 9, 2023, 1:59 PM IST

ஓடும் பேருந்தின் பின் பக்கம் ஏறி உடமைகள் கொள்ளை.. வடமாநிலத்திற்கு சுற்றுலா செல்வோர் கவனம்
ஓடும் பேருந்தின் பின் பக்கம் ஏறி உடமைகள் கொள்ளை.. வடமாநிலத்திற்கு சுற்றுலா செல்வோர் கவனம்

கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி, உடமைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி, உடமைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், கடந்த மே 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

பின்னர், காசி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்று விட்டு நேற்றைய முன்தினம் (ஜூன் 7) இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அதிகாலை 4 மணியளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்துள்ளனர். அப்போது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், அதிகாலை 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர், ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்துள்ளது.

அது மட்டுமல்லாமல், ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்துள்ளது. மேலும், இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்கு சென்றோம்.

காசி, உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று விட்டு ஒடிசாவில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளை அடித்துள்ளனர்.

குஜராத்தை அடைந்ததும் தங்கு விடுதிக்குச் சென்றபோது இந்த சம்பவம் தெரிய வந்தது. மேலும், துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் பொருட்கள் பேருந்தின் உள் பகுதியில் வைத்ததால் அவை தப்பியது.

சினிமாவில்தான் இது போன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது நாங்கள் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னதாக, வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து, ஓடும் லாரியில் ஏறி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில், தற்போது சுற்றுலா சென்ற பேருந்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பாக சுற்றுலா சென்றவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Mumbai Murder: லிவ் இன் பார்ட்னரை கூறுபோட்டு குக்கரில் வேக வைத்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.