ETV Bharat / state

“மீண்டும் கோவையில் நிற்பேன்” - கமல்ஹாசன் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 3:13 PM IST

Updated : Sep 22, 2023, 6:00 PM IST

Etv Bharat
Etv Bharat

Kamal Haasan contesting in Coimbatore: வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கமலஹாசன் பேச்சு

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பேசினார். அப்போது பேசிய அவர், “சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள்.

அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர், பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல. சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர், பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும். சமீப காலங்களில் நடப்பதை மத்திய அரசு மதிப்பதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலை மத்திய அரசு சீக்கிரம் கொண்டு வருவார்கள். கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் எம்எல்ஏ. இல்லையென்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன். என் முகத்தில் அப்போது சோகம் இல்லை. அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாகக் கூடாது. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள். சென்னைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள்.

இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்புதான் கேட்க வேண்டும். கருணாநிதி என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார். அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 20 பேர் என் அப்பா போல இருக்க வேண்டும். தேர்தலில் நீங்கள் வேலை செய்ய வேண்டும்.

கோவையில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும். விக்ரமுக்கு கூட்டம் சேர்ந்தது. மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன். தலைவனால் இயலாததை தொண்டனிடம் சொல்லக் கூடாது. எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்பேன். உண்மை தோற்றிருக்கக் கூடாது என திமுக நிர்வாகி ஒருவர் சொன்னார்.

தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்யத் தயாராக வேண்டும். நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதற்கும் வர வேண்டும். நமது அஜாக்கிரதையினால் நாம் பழியாகி விடக் கூடாது. ஒருவர் தேரை இழுக்க முடியாது. அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும். நேர்மைக்கு எல்லா இடங்களிலும் மரியாதை உள்ளது. அவர்களே நம்மை அழைப்பார்கள். அழைப்பிதழ் அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். முதியவர்கள், புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும்.

என்னை தலைவன் என நம்புபவர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் வேலியாக இருக்கக் கூடாது. ஏணியாக இருக்க வேண்டும். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை, உறவு நிரந்தரம். வேலை செய்தால்தான் பதவி நிரந்தரம்.
ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வதிகாரம். அதற்கு எதிராக இந்தியா வெகுண்டு பேசுகிறது. ஒரே தேர்தல், ஒரே தலைமை, ஒரே மெட்டை என்பதை ஏற்க முடியாது.

இந்தி ஒழிக என சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இந்தி பேசினால்தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். ராஜராஜசோழன் இந்தி தெரிந்தால்தான் வேலை தருவேன் என சொல்லவில்லை. தமிழ் தெரிந்தவர்கள் தமிழ் பேசுபவர்களுக்கு வேலை தந்தால் போதும். 8 கோடி பேர் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேலை செய்தாலே, முதன்மை மாநிலமாகி விடும். அரசியல் என்றால் சூதுவாது இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. வெறி பிடிக்காமல் இருக்க அன்பு ஒன்று மருந்து.

அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதைவிட பெரிய மதம் மனிதம். எனக்கு பயம் வரும்போது மனிதர்களை பற்றி நினைத்துக் கொள்வேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் தனியார் ஹோட்டல் வரை வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் கணியூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொள்கிறார்.

இதையும் படிங்க: சனாதனம் குறித்த சர்ச்சைப் பேச்சு; உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Last Updated :Sep 22, 2023, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.