ETV Bharat / state

ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்!

author img

By

Published : Feb 22, 2020, 11:17 AM IST

ஈஷோ யோக மையம்  மஹா சிவராத்திரி விழா  isha yoga foundation siva rathiri function  சத்குரு ஜக்கி வாசுதேவ்  குடியரசு துணைத் தலைவர்
ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்

கோவை: ஈஷா யோகா மையத்தில் 26ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா பிரமாண்டமாகவும், கோலகலமாகவும் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. பல அரிய ஆன்மிகச் சாத்தியங்களை உள்ளடக்கிய ஆண்டின் நீண்ட இரவாக மஹா சிவராத்திரி விளங்குவதாகவும்; இந்த இரவு முழுவதும் முதுகுத்தண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை மக்களுக்கு வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. மஹா சிவராத்திரியை ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அதன்படி, ஈஷா யோகா மையத்தில் 26ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது.

தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் விழாவானது நேற்றுத் தொடங்கியது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், அவரை வரவேற்று சூர்ய குண்டம், நாக சந்நிதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

அவர்கள் தியானலிங்கத்தில் நடந்த பஞ்ச பூத ஆராதனையில் பங்கேற்றுவிட்டு, ஆதியோகி முன்பு அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தனர். அப்போது லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை நடத்தப்பட்டது. இதன்பின்னர் 'மரணம்' தொடர்பாக சத்குரு எழுதிய ’டெத்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.

சத்குரு எழுதிய டெத் புத்தக வெளியீட்டு விழா

விழாவில் பேசிய ஜக்கி வாசுதேவ், "வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருப்பது, நமக்கான ஒரு அருள். இந்த நாளில் கிரகங்களின் அமைப்புகளால் நம் உயிர் சக்தி இயற்கையாகவே, மேல்நோக்கிச் செல்லும் வாய்ப்புள்ளது. இந்த இரவு வெறும் விழித்து இருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வுடன் இருக்கும் இரவாக அமையட்டும். நம்முள் இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைப்பதற்கு இந்த இரவு மிகவும் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மேலும், ஹிமாச்சலப் பிரதேச ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர் அஸ்வினி குமார், தமிழ்நாடு அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு தியானம் ஜக்கி வாசுதேவால் நடத்தப்பட்டது.

இதில், லட்சக்கணக்கான மக்கள் தியான நிலையில் 'ஓம் நமச்சிவாய' மந்திர உச்சாடனம் உள்ளிட்ட தியான முறைகளை மேற்கொண்டனர். பின்னர், பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோணிதாசனின் இசை நிகழ்ச்சி மக்களைத் துள்ளி நடனமாட வைத்தது. மேலும், திரைப் பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சியும், கபீர் கபே குழுவின் இசை நிகழ்ச்சியும் இரவு முழுவதும் மக்களை விழிப்பாக வைத்திருந்தது.

ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சி காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் பாடிய தேவார இசைப் பாடல்கள் மக்களை பக்தியில் பரவசப்படுத்தின. அதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஈஷா யோகா மையத்தில், பராமரிக்கப்பட்டு வரும் 350க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் காட்சிப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு நாட்டு மாடுகளின் பெயர்களும் அதனைப் பற்றிய முக்கிய தகவல்களும் அக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மேலும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம் சார்பாகவும் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

பக்தர்கள் அனைவருக்கும் 'ஆதியோகி' சிலையில் ஒரு ஆண்டுகளாக அணிவிக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளும் சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இரவு முழுவதும் தொடர்ந்த நிகழ்ச்சிகள் காலை 6 மணிக்கு சத்குருவின் உரையுடன் முடிவடைந்தது. சிவராத்திரியை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: மகா சிவராத்திரி - திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் நாட்டியாஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.