கொங்கு மண்டல வளர்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி - அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Sep 25, 2021, 10:29 PM IST

அமைச்சர் எ.வ.வேலு

கொங்கு மண்டல வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சி அல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கோவை : அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இந்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பு, கொங்கு கிலோபல் போரம் ஆகிய அமைப்புகள் சார்பில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொழில்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கம்

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.மேலும் இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுந்தரா, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மேற்கு மண்டல தொழில் துறையினர் சந்திக்கும் சவால்கள், தொழில்துறை வளர்ச்சி காண நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு தொழில் துறை அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.தொழில்துறைக்கான சாலை விரிவாக்கம், நெடுஞ்சாலை கட்டமைப்பு, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

சித்தூர் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை

இந்நிகழ்வில், சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, ”கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதிக்கு சாலை கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பவை. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் வளர்ச்சி பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதிகமாகும்.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதிக்கான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.பல்லடம் முதல் கொச்சி வரையிலான சாலையை அகலப்படுத்தபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்லடம் சித்தூர் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை முதல் கரூர் வரை நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன 3 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 2024ஆம் ஆண்டுக்கு முன்பு இப்பணிகள் நிறைவு பெறும்.

கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் முக்கிய பகுதிகளில் இறங்கு தளம் அமைப்பதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் முக்கிய மேம்பாலங்களில் இறங்கு தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இக்கூட்டத்தின் மூலமாக தொழில்துறையினர் அளித்துள்ள கோரிக்கைகள் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்” எனக் கூறினார்.

அமைச்சர் எ.வ.வேலு

கொங்கு மண்டல வளர்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவையின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி உறுதுணையாக இருக்கும்.கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு ஆயிரத்து 132 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதார். நாளை மறுதினம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும்.

600 ஏக்கர் நிலம் விமானநிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். கொங்கு மண்டல வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சி அல்ல, ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : பருவமழை முன்னெச்சரிக்கை - களத்தில் இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.