ETV Bharat / state

'2047-ல் உலகையே இந்தியா வழிநடத்த வேண்டும்' - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

author img

By

Published : Mar 11, 2022, 5:22 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில் நடந்த தென்மண்டல துணைவேந்தர் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற பாரதியின் வரிகளை மேற்கொள்காட்டி சிறப்புரை ஆற்றியுள்ளார். மேலும் அவர் உலகையே விரைவில் இந்தியா வழிநடத்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பல்கலைக்கழக கூட்டமைப்பு சார்பாக நடந்த தென்மண்டல துணைவேந்தர்கள் கூட்டத்தை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்தார்.

பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், ''நிகழ்ச்சிக்கு வந்துள்ள துணைவேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள். கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை; அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதனால், நாம் அனைவரும் உயர் கல்வியை மாற்றி அமைக்கப் பாடுபட வேண்டும். இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதைப் புரியவைக்க வேண்டும்.

மக்களின் பிரச்னை அரசுக்கும்தான்

இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாக இருந்தோம்.

அரசுகள் 5ஆண்டுகள் தான் இருக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள். அது அடுத்த 3ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. அதன் பின்னர், இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது.

அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகளாகவே இருக்கின்றன. 5ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழுப்பலனும் கிடைப்பதில்லை. இதனால், மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை.

மோடி ஆட்சியில் புதுமாற்றம்

மேலும், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின், புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது. 'செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் ஆட்சிபொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டு 400 புதிய நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், 2022ஆம் ஆண்டு 10 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக அது உயர்ந்துள்ளது.

உலகை வழிநடத்தும் இந்தியா

வரும் 2047ஆம் ஆண்டில் நம் இலக்கு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் என்பதே. அதனை துணைவேந்தர்கள் யோசித்து, வேலைக்காக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பயன்படும் வகையில் திட்டமிடல் செய்ய வேண்டும்.

கடந்த 20ஆண்டுகளில் 30,000 ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்துள்ள மாணவர்களின் ஆராய்ச்சி மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். சில தலைவர்கள் குறித்து ஆய்வுக்கட்டுரை தயாரிப்பதால் யாருக்கும் பயனிருக்கப் போவதில்லை'' எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இதையும் படிங்க: சூர்யா மீது பாமகவிற்கு ஏன் இவ்வளவு வன்மம்? - என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.