ETV Bharat / state

2022இல் திரும்பிப் பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி!

author img

By

Published : Dec 20, 2022, 3:53 PM IST

2022இல் திரும்பி பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணனி!
2022இல் திரும்பி பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணனி!

கோவை கார் வெடிப்பு சம்பவம், நடப்பாண்டில் முக்கியமாக உற்றுநோக்கவேண்டிய ஒன்றாக மத்திய, மாநில அரசுகளுக்கு மாறியுள்ளது.

கோயம்புத்தூர்: உக்கடம் அருகே கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியது கண்டறியப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்து ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் கண்டறியப்பட்டன. பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என்.நகர் கோட்டைப் புதூரைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு: மேலும் இவர் 2019ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், ஜமேசா முபினிடம் தேசிய பாதுகாப்பு முகமை விசாரணை நடத்தியதும் தெரிய வந்தது. இதனையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், அங்கிருந்து 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.

அதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் ஆன்லைனில் வெடி மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாக, கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

2022இல் திரும்பி பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பிண்ணனி!
2022இல் திரும்பிப் பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி!

என்ஐஏ விசாரணை: இதனிடையே கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு உதவுவதற்காக 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் 43 இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேலும் ஜமேசா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்ஐஏ தரப்பு தெரிவித்தது.

மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழி எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதிச்செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: இவ்வழக்குத் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பீக் (25), நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த உமர் பாரூக் (39), உக்கடத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் (28) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அவர்களிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில், குன்னூரில் உமர் பாரூக் வீட்டில் ஜமேசா முபின் ரகசிய கூட்டம் நடத்தியதும், அதில் தவ்பீக், பெரோஸ்கான் ஆகிய இருவர் கலந்துகொண்டதும் தெரிய வந்தது. மேலும் மூவரும் ஜமேசா முபினின் தீவிரவாதச் செயலுக்கு உதவியதும், தவ்பீக் இஸ்லாமிய அடிப்படைவாத புத்தகங்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட வெடிமருந்து தயாரிப்பு குறிப்புகளை வழங்கியதும் தெரிய வந்தது.

இதனிடையே கர்நாடக மாநிலம், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது ஷாரிக், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

அப்போது அங்கு தங்கியிருந்த தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவரது போனை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து காட்டூர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முகமது ஷாரிக் யார் எனத் தெரியாமல் ஆசிரியர் சுரேந்திரன் பழகியதும், தனது பெயரில் சிம் கார்டு வாங்கி கொடுத்ததும் தெரிய வந்தது.

தமிழ்நாடு காவல் துறையின் நடவடிக்கை என்ன? இதனைத்தொடர்ந்து சுரேந்திரனிடம் கோவை மற்றும் கர்நாடக மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த இரண்டு சம்பவங்களும் கோவையை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. இதனிடைய தமிழ்நாடு காவல்துறை தலைவர், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி, சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கும் வகையில் காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவங்கள் கோவையில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; 5 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.