ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: காலில் காயமடைந்த காட்டுயானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை!

author img

By

Published : Feb 28, 2022, 10:21 PM IST

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி ()

பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்த காட்டுயானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கண்ணாடி பங்களா அருகே ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை காலில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு தேடுவதில் சிரமப்பட்டு வந்தது.

வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் நேற்று(பிப்.27) ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டுயானை நடக்க முடியாமல் இருப்பது கண்டு வனச்சரகர் காசிலிங்கத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆனைமலைப் புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் இன்று (பிப்.28) வனச்சரகர் காசிலிங்கம், கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ராஜேஷ்குமார் என 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இந்த யானை வந்துள்ளது. தனது தாயுடன் காட்டுயானை இருக்கும்போது ஆண் காட்டுயானை இனப்பெருக்கம் செய்ய முயற்சிக்கும்போது இந்தயானையை தந்தத்தால் காலில் குத்தி உள்ளது" என்றார்.

காயமடைந்த காட்டுயானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை

கண்ணாடி பங்களா வனப்பகுதியில் இருந்து கும்கி யானைகள் கலீம், சஞ்சீவ், அபிநயா, செல்வி வரவழைக்கப்பட்டு அவற்றின் உதவியுடன் காயமடைந்த காட்டுயானைக்கு மயக்க மருந்து செலுத்தாமல் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யானையைப் பார்த்துக்கொள்ள விரைவில் பாகன் நியமிக்கப்படுவார். காயம் முழுமையாக குணமடைந்தபின் வனப்பகுதியில் மீண்டும் கொண்டு சென்று விடுவது குறித்து வனத்துறை உயர் அலுவலர்கள் முடிவு எடுப்பார்கள் எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து வெளியேறுவதில் சிக்கல்: சிவகங்கை மாணவர் காணொலி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.