ETV Bharat / state

"அண்ணாமலையுடன் சண்டையா? - அக்கா, தம்பி போல இருந்து கட்சியை வளர்க்கிறோம்" வானதி சீனிவாசன் கருத்து

author img

By

Published : Jul 10, 2023, 7:18 PM IST

Etv Bharat
Etv Bharat

அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை நாங்கள் அக்காவும், தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம் என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: ரங்கநாதபுரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் 'துளிர்' திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை, உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது, "பெண்கள் பள்ளியில் 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான திட்டம் தொடங்கியுள்ளோம். வளர் இளம்பெண்களுக்கு இந்த பிரச்னை அதிகமாக இருப்பதால் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். மாணவிகளுக்கு நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் முக்கியம் எனவே மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அட்டை வழங்குவதில் சில சுணக்கங்கள் இருக்கின்றன. இது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார். எதற்காக இந்த பயம் முதலமைச்சருக்கு வருகிறது? அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கு என்ன காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா? எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை, கலைத்ததும் இல்லை எதற்காக முதலமைச்சருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என தெரியவில்லை.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் எனவும் முதலமைச்சர் பேசியிருக்கின்றார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறது. நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை.

முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்னைகளை பார்க்க வேண்டும். மணல் கடத்தல், மது பிரச்னைகள், அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச லாவண்யம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முதுலமைச்சர் கவனிக்க வேண்டும். பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்னைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்னை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதலமைச்சர் முயல்கிறார். தமிழ்நாட்டின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய,“தமிழ்நாடு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை, மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டுத் தளங்களைப் பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் ஆலுநர் பேசுகிறார், இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது?. ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா?. ஆளுநரை பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

மாநிலத்தின் ஆளுநர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்த செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி குறிப்புகள் வருகிறது, ஒவ்வொன்றிற்கும் ஆளுநர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் வந்திருக்கிறதா?. கோவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து எவ்வளவு அநாகரிகமாக பேசினார்கள், திமுகவினரின் மேடை நாகரீகத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் பெண்களை எவ்வளவு இழிவாக பேசுவார்கள், கேவலமாக பேசுவார்கள், பெண் அரசியல் தலைவர்களை இழிவு படுத்துவார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்” என காட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வரும் போதெல்லாம் நீங்கள் ஏன் அவரை சந்திப்பதில்லை என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், மாநில உயர்மட்ட குழு நடைபெற்றது அதில் இருவரும் காலையில் இருந்து ஒன்றாக இருந்தோம். அவர் கோவை வரும் போது எனக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருப்பதால் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலவில்லை. அடுத்த முறை கட்டாயம் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம். ஆகையால், எனக்கு அண்ணாமலைக்கு எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அக்காவும், தம்பியுமாக ஒன்றாக கட்சியை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடுதலாக 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை - முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.