ETV Bharat / state

Bike Taxi: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு!

author img

By

Published : Jun 9, 2023, 4:59 PM IST

Updated : Jun 9, 2023, 5:14 PM IST

Bike taxis are not allowed in Tamil Nadu action will be taken by the police Transport Minister Sivasankar has said at coimbatore
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

பைக் என்பது தனிநபர் பயன்படுத்தக்கூடிய வாகனம், அதை வாடகைக்கு விடுவது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதுவரை தமிழகத்தில் பைக் டாக்சி பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக கோவை கிளை பணிமனையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கோவையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 353 பணியாளர்கள், விருப்பார்ந்த பணி ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு 145.58 கோடி பணபலன்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பேருந்துகளில் முதல் கட்டமாக 65 பேருந்துகளுக்கு GPS மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. மேலும் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள் ஈரோடு மண்டலத்தில் மூன்று பணிமனைகள் மற்றும் திருப்பூர் மண்டலத்தில் ஒரு பணிமனை என 7 பணிமனைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகளை துவக்கி வைக்கப்பட்டு, அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஓட்டுநர் கையேடு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த ஆட்சி காலத்தில் இரண்டு ஆண்டு கால பண பலன்களை வழங்காமல் பாக்கி வைத்து சென்று விட்டனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பணி பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டு கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தற்போது பலரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருவதால் அதிகமானோர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது அதனையும், போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து போக்க வேண்டும். அதே சமயம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்களும் போடப்பட்டு வருகிறது. புதிய பேருந்துகள் வரும் பொழுது கூடுதலாக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கையும் துவங்கப்பட்டுள்ளது. அதுவரை பள்ளி கல்லூரி காலத்தில் நல்ல முறையில் பேருந்துகளை இயக்க கூடிய கட்டாயத்தில் இருப்பதால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “இன்று கோவையில் 518 பேருக்கு 145.58 கோடி பணபலன்கள் வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மண்டலங்களில் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறைகள் துவக்கி வைத்துள்ளோம். மேலும் முதல்கட்டமாக சில பேருந்துகளில் GPS கருவி பொருத்தப்பட்டு அதுவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகாலத்தில் ஒரு ஓட்டுநர், நடத்துனர் கூட பணிக்கு அமர்த்தப்படவில்லை. பிறகு கரோனா காரணமாக புதிய நடத்துனர் மற்றும் ஓட்டுநரை பணிக்கு எடுக்க இயலாத சூழல் இருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பணிக்கு எடுப்பதற்கான ஆணைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பணியில் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மற்ற அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுனர் நடத்துனரை எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்துகளை பராமரிப்பதற்கு வழக்கமாக ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கப்பட்டு தான் வருகிறது, எந்த ஒரு குறையும் இல்லை. கூடுதலாக நிதி ஒதுக்க தேவை இருக்கும் பட்சத்தில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது செயல்படுத்தப்படும். பஞ்சப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான டெண்டர்களும் துவங்கப்பட்டுள்ளது. மேலும் KMW வங்கியின் நிதி உதவியுடன் 2400 பேருந்துகள் வாங்குவதற்கு பணிகள் துவங்கியுள்ளது. நான்கில் இருந்து ஆறு மாதத்திற்குள் புதிய பேருந்துகள் நடைமுறைக்கு விடப்படும்” என்றார்.

பைக் டாக்ஸி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “பைக் என்பது தனி நபர் பயன்படுத்தக்கூடிய வாகனம், அது இன்னும் வாடகைக்கு விடப்படக்கூடிய வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு அரசை பொருத்தவரை அதனை பயன்படுத்தக் கூடாது. காவல்துறையும் பல்வேறு இடங்களில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகரில் ஆன்லைனில் டிக்கெட் பெறுவதற்கான கருவிகளுக்கு டெண்டர் விடப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ளது. கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வந்த பின்னர் பரிசோதித்து மற்ற இடங்களிலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.

பின்னர் GPS கருவி பொருத்தப்பட்டுள்ள பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சர்கள் அந்த வசதிகளை பரிசோதித்தனர்.
சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிவானந்தா காலனி வரை பயணம் மேற்கொண்ட அவர்கள் ஒலி அறிவிப்பான் கருவி சரியான முறையில் இயங்குவதை பரிசோதித்தனர்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை துணைக்கு அழைக்கும் திமுக - ஈபிஎஸ் கண்டனம்

Last Updated :Jun 9, 2023, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.