ETV Bharat / state

சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.18 கோடி வரை பொதுமக்கள் இழப்பு - கோவை மாவட்ட எஸ்பி தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 6:21 PM IST

Etv Bharat
Etv Bharat

Covai Crime News: ஒரே ஆண்டில் கோவையில் சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.18 கோடி வரை பொதுமக்கள் இழந்துள்ளதாகவும், 205 போக்சோ வழக்குகள் பதிவாகியதாகவும் கூறிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தெரியாத வலைதளங்கள், டெலிகிராம் லிங்குகளை யாரும் பயப்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.

காணாமல் போன 205 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தொலைத்த, மற்றும் பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட 205 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில் மீட்கப்பட்ட செல்போன்களை பத்ரி நாராயணன், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது உடைமைகளை மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என சில அறிவுரைகளையும் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு 10 வேண்டுகோள்களை முன்வைக்கிறோம் எனவும், புத்தாண்டு வரும் பொழுது பலரும், Resolution எடுப்பார்கள், அவ்வாறு எடுப்பவர்கள் இதனையும் கடைபிடிப்பார்கள் என நம்புவதாக கூறினார். அதன்படி, பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு Safe Touch குறித்து சொல்லி தர வேண்டும், இளம்பருவ குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் அனைவரும் நாள்தோறும் சில நிமிடங்களாவது அவர்களுடன் நேரம் செலவழித்து வாழ்க்கை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றார்.

இந்த வருடத்தில் மட்டும் 40 கொலைகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதில் 12 கொலைகள் குடும்பத்திற்குள்ளும், மேலும் சில கொலைகள் நண்பர்களுக்குள் நடந்ததாக தெரிவித்தார். இவை அனைத்தும் கோபத்தின் வெளிபாடு எனக் கூறிய அவர், கோபம் வரும்போது இரண்டு நிமிடம் யோசித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம், வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். சமீப காலமாக, கோவையில் ஆன்லைன் மோசடிகள், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் குற்றங்கள் நடப்பதாக கூறிய அவர், இதுபோன்ற மோசடிகளில் மக்கள் ஏமாற வேண்டாம் எனவும்; நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை இதுபோன்று வீணடிக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இந்த வருடம் மட்டும் ரூ.18 கோடி பணத்தை கோவை மாவட்ட மக்கள் சைபர் கிரைம் குற்றவழக்குகளில் இழந்துள்ளதாக கூறிய அவர், பொதுமக்கள் தெரியாத வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம், டெலிகிராம் லிங்க்குகளில் சேர வேண்டாம், பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என எச்சரித்தார்.

மேலும், எங்கேனும் சந்தேகத்திற்கிடமான ஒன்றை பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் நன்றாக இருக்கும் சிசிடிவிகளை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்கள் குறையும் என்றார். காவல் துறையினருக்கு 3வது கண் சிசிடிவி என்றால், 4வது கண் பொதுமக்கள் தான் எனக் கூறிய அவர், பொதுமக்கள் தரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

மேலும் கஞ்சா பறிமுதல் குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் கடந்த ஆண்டு 540 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 662 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா விற்பனை செய்த கடைகளை பொறுத்த வரை கடந்த ஆண்டு 10 கடைகள் சீல் வைக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு 40 கடைகள் வரை சீல் வைத்துள்ளதாக தெரிவித்தார். விபத்து நடக்கும் பகுதிகளில் பொதுமக்கள் இன்னும் Response எடுத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார். எனவே இந்த Resolution-களை மக்கள் இந்த ஆண்டு எடுத்துக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு மட்டும் மொபைல்கள் காணாமல்போன வழக்குகள் 1,853 வந்துள்ளதாகவும்; அதில் பாதி கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆலந்துறை பகுதியில் ஒரு குழந்தை பாதிக்கபட்டது குறித்து தகவல் வந்தவுடனேயே அதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக கூறினார்.

மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் இரவில் 41 இருசக்கர ரோந்து வாகனங்கள், 13 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்; இதன்மூலம், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாகப் பிடிக்க முடிவதாகவும் கூறினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து தற்காப்பு கலைகளை கற்று தருவதாகவும், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறைவாக இருக்குபோதும் போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகி வருவதாகவும், இந்தாண்டு மட்டும் 205 போக்சோ வழக்குகள் பதிவாகியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கையில் குப்பைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்..! கோவையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.