ETV Bharat / state

கோவையில் சிறுத்தை தாக்கியதில் குட்டி யானை பலி; குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாசப்போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 1:56 PM IST

Updated : Jan 3, 2024, 5:01 PM IST

குட்டியை பாதுகாக்க தாய் யானை நடத்திய பாச போராட்டம்
சிறுத்தை தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு

Coimbatore Baby elephant dead: கோவை மாவட்டம் அட்டமலை பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 வாரங்களே ஆன குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: சிறுத்தை தாக்கியதில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குட்டி உயிருடன் இருப்பதாக கருதி வனத்துறையினரை நெருங்க விடாமல் தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நுழைவது வழக்கம். அப்படி வரும் இந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை புதூர் அட்டமலை பகுதியில் யானை கூட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மதுக்கரை வனத்துறையினர் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று நடக்க முடியாமல் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிங்க: தாளவாடி அருகே உலாவரும் காட்டு யானைகள்.. பொதுமக்கள் அச்சம்

தொடர்ந்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர்கள் சந்தியா, அருண்குமார் ஆகியோரின் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். முதல் கட்டாமாக யானை குட்டிக்கு குளுக்கோஸ் மற்றும் பால் பவுடர் அளிக்கப்பட்டு பின் காயத்திற்கு மருந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் அருகில் இருந்த தாய் யானை வனத்துறையினரை பார்த்தவுடன் ஆவேசமாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானையை அங்கிருந்து விரட்டிவிட்டு குட்டிக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். எனினும் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து குட்டியானையை வனப்பகுதியிலேயே வைத்து வன கால்நடை மருத்துவர் சுகுமார், உடற்கூறு ஆய்வு பரிசோதனை நடத்தினார். இதில் உயிரிழந்தது, பிறந்து 2 வாரமே ஆன ஆண் யானை குட்டி எனவும், முழு வளர்ச்சி இன்றி பிறந்ததால் சரி வர நடக்க முடியாத நிலையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் சில தினங்களுக்கு முன்னதாக சிறுத்தை தாக்கியதில் உடலில் நகம் மற்றும் பற்காயங்கள் ஏற்பட்டு குட்டியானை மிகவும் பலவீனமடைந்து தற்போது இறந்துள்ளது என்பது உடற்கூராய்வின் போது தெரியவந்துள்ளது. உடற்கூராய்வுக்கு பின்னர் குட்டி யானை உடல் வனப்பகுதிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'தாய் மடியே சுகம்'.. தாயை பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சேர்ந்த அழகிய தருணம்!

Last Updated :Jan 3, 2024, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.