ETV Bharat / state

அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படுமா? - அண்ணாமலை சூசகம்

author img

By

Published : May 27, 2023, 8:56 AM IST

அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படுமா? - அண்ணாமலை சூசகம்
அதிமுகவினரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படுமா? - அண்ணாமலை சூசகம்

கட்சியைத் தாண்டி ஊழல் குறித்து பேசப் போகிறோம் எனவும், ஜூலை முதல் வாரத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார். இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் எம்பிக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். எம்பிக்கள் பங்கேற்கவில்லை எனில், அது ஒரு சரித்திரப் பிழையாக மாறிவிடும்.

தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையானது, இறுதி கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கான முழு பொறுப்பையும் திமுக ஏற்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் தமிழ் வழி கல்வி நிறுத்தப்பட்டதற்கு துணைவேந்தரை மட்டும் பொறுப்பாக்குவது தவறானது. அதில் திமுக எம்எல்ஏ உள்பட அரசு உயர் அதிகாரிகளும், ஆட்சி மன்றக் குழுவினரும் இருக்கும் நிலையில், துணைவேந்தர் மீது மட்டும் பழியை போடுவது சரியானது கிடையாது. தமிழ்நாடு அரசுக்கு இதில் ஒரு உள்நோக்கம் இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி அழைத்த விவாதத்திற்கு தயாராகவே இருக்கிறோம். இடத்தையும், நேரத்தையும் அவர்களே முடிவு செய்து சொல்லட்டும். நாங்கள் விவாதத்தில் பங்கேற்கத் தயார். தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அவர் தமிழ்நாட்டிற்காக பெற்ற முதலீடுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு முதலீடு குறைந்து வருகிறது. பாஜக வெளியிடும் ஊழல் பட்டியல்களுக்கும், மத்திய அரசின் சோதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திமுகவைப் பொறுத்தவரை பாஜக சின்ன கட்சி என்று சொன்னார்கள். எங்களுக்கு மதிப்பளித்து பிரதமர் சோதனை நடத்துவாரா எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், நாங்கள் எல்லாம் பாஸ் கிடையாது என்றும், பாஸ் எல்லாம் டெல்லியில் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். வருகிற காலத்தில் பாருங்கள், யார் பாஸ், யார் பாஸ் இல்லை என்பது தெரிய வரும்” என தெரிவித்தார். இதனையடுத்து, இது எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய அண்ணாமலை, “யாருக்கும் நேரடியாக நான் சொல்லவில்லை. கட்சியைத் தாண்டி ஊழல் குறித்து பேச போகிறோம்.

ஜூலை முதல் வாரத்தில் திமுகவின் இரண்டாவது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். அதில் திமுகவும் இருக்கிறது, திமுக சாராதவர்களின் பட்டியலும் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது. அதில், கூரையே இடிந்து விழுகிறது. இது குறித்து கேட்டால், முன்னாள் ஆட்சியில் இருந்தவர்கள் கட்டினார்கள் என்று சொல்கின்றனர்.

யார் ஆட்சியில் கட்டினாலும் ஊழல், ஊழல்தான். மத்திய அரசு நிதியில் இருந்து நடந்த மோசடிகள் மற்றும் ஊழல்கள் ஆகியவை வெளிக் கொண்டு வரப்படும். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் நடந்திருக்கிறது. ஆட்சியில் இருந்த அனைவரின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்” என கூறினார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு தமிழ் மொழி பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் பொன்முடி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.