தைவானில் கோவை இளைஞர் 24வது மாடியில் இருந்து விழுந்து மரணம்.. தைவான் காவல்துறை விளக்கம் என்ன?

தைவானில் கோவை இளைஞர் 24வது மாடியில் இருந்து விழுந்து மரணம்.. தைவான் காவல்துறை விளக்கம் என்ன?
Coimbatore Youth Taiwan dead: தைவானில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்த கோவை பொறியாளர் 24வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாக தைவான் காவல்துறையினர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம் வயது 65. இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி கூட்டுறவுத் துறையில் தணிக்கை துறை ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செல்வி வயது 57 இவர் சிறுமுகை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ரகோத்தமி வயது 32 என்ற மகளும் ராகுல் ராம் வயது 27 என்ற மகனும் உள்ளார்கள். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், மகன் ராகுல் ராம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு மேல் படிப்புக்காகத் தைவான் நாட்டிற்குச் சென்றார். அங்குக் கடந்த ஐந்தாண்டுகளாக எம்.எஸ்., பி.எச்.டி படிப்பு முடித்துவிட்டு தைவானில் உள்ள எடிசன் லைடெக் ஆப்டோ கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தீபாவளி அன்று ராகுல்ராம் போனில் தனது தாய், தந்தை, சகோதரி, மைத்துனர் மற்றும் உறவினர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் இந்த வேலை பிடிக்கவில்லை வேறு வேலைக்குச் செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார். அவரது பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி வரும்படி கூறியுள்ளனர். அப்போது அவர் சிறிது நாட்கள் கழித்து அங்கு வருவதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (15.11.23) பகல் 1 மணிக்குத் தைவான் போலீசார் அவரது தாயார் செல்வியிடம் மகன் ராகுல் ராம் 24வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டதும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும், தனது மகனின் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியாமல் தவித்தனர். இதுகுறித்து, ராகுல்ராமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேட்டுப்பாளையம் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த ஆ.ராசா எம்.பி.யின் உதவியாளரிடம் இறந்த ராகுல் ராமின் உடலை விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்து தரும்படி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.
இதனையடுத்து, அவரது உதவியாளர் இது குறித்து உடனடியாக ஆ.ராசாவின் தனிக் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததோடு தேவையான நடவடிக்கைகளையும் உடனே மேற்கொண்டார். தைவான் போலீசாரின் விசாரணைக்குப் பின்பு தான் ராகுல் ராம் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்த உண்மையான காரணம் தெரிய வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
