ETV Bharat / state

UPSC 2023: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு தொடங்கியது.. கோவையில் தேர்வு எழுதிய 9 மாத கர்ப்பிணி

author img

By

Published : May 28, 2023, 11:17 AM IST

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், கோவையில் 9 மாத கர்ப்பிணி இத்தேர்வினை எழுதுகிறார்.

UPSC 2023: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு தொடங்கியது
UPSC 2023: யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

யுபிஎஸ்சி தேர்வர் கவிதா அளித்த பேட்டி

கோயம்புத்தூர்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வு இன்று (மே 28) நடைபெறுகிறது. இந்தத் தேர்வு கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. மேலும், இந்தத் தேர்விற்கு மொத்தம் 7 ஆயிரத்து 742 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தேர்விற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில், துணை ஆட்சியர் முன்னிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறை கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குனர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தேர்வு மையங்களில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் சிக்னல் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேநேரம், தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த கவிதா என்ற ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி இந்தத் தேர்வினை எழுதுகிறார்.

இது குறித்து கவிதா கூறுகையில், “எனது குடும்பத்தினர் மற்றும் கணவர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். 5 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் தேர்வு எழுத வந்துள்ளேன். மேலும், பெண்கள் அனைவரும் தங்களது குடும்ப பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், தமது இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய வழிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, யுபிஎஸ்சி 2022 தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 2 ஆயிரத்து 529 பேர் தேர்வாகி, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இதையும் படிங்க: இரு முறை தோல்வியிலும் துவளாத இஷிதா.. யுபிஎஸ்சியில் முதலிடம் பிடித்த கால்பந்து வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.