இரு முறை தோல்வியிலும் துவளாத இஷிதா.. யுபிஎஸ்சியில் முதலிடம் பிடித்த கால்பந்து வீராங்கனை!

author img

By

Published : May 24, 2023, 11:25 AM IST

இரு முறை தோல்வியிலும் துவளாத இஷிதா.. யுபிஎஸ்சியில் முதலிடம் பிடித்த கால்பந்து வீராங்கனை

கால்பந்து வீராங்கனையாக இருந்த இஷிதா கிஷோர், யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே இருமுறை தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது முறை எழுதிய தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

டெல்லி: இந்திய நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் யுபிஎஸ்சி என்ற சிவில் சர்வீசஸ் தேர்வின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன. அதேநேரம், இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு (preliminary), முதன்மைத் தேர்வு (main) மற்றும் நேர்முகத் தேர்வு என 3 பகுதிகளாக நடத்தப்படுகிறது.

அந்த வகையில், யுபிஎஸ்சி 2022இன் முதல்நிலைத் தேர்வானது, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்விற்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 697 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5 லட்சத்து 73 ஆயிரத்து 735 பேர் தேர்வெழுதினர். இதில், 13 ஆயிரத்து 90 பேர் தேர்வாகி, முதன்மைத் தேர்வை கடந்த செப்டம்பரில் எழுதினர்.

இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று (மே 23) வெளியானது. இதில் 2 ஆயிரத்து 529 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், இஷிதா கிஷோர் ( Ishita Kishore) தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார். இந்தத் தேர்வினை அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் என்ற பாடத் திட்டத்தினை தேர்வு செய்ததன் மூலம் தேர்ச்சி பெற்றுள்ளார், இஷிதா.

இவர், டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் 2017ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டம் பெற்றுள்ளார். இதனையடுத்து, எர்ன்ஸ்ட் மற்றும் யங் என்ற இடத்தில் ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் கூறுகையில், “என்னுடைய நாட்டுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அந்தப் பணியை சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்னுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த சரியான வெற்றியாக இதை நான் கருகிறேன். யுபிஎஸ்சியின் முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய 3 தேர்வுக்கும் வெவ்வேறு விதங்களில் தயாராக வேண்டி இருக்கும்.

ஆனால், விடாமுயற்சி மட்டும் இருந்தால், நேர்மையான வெற்றி நம்மைத் தேடி வரும். கல்வியறிவைத் தாண்டி, உணர்வு ரீதியாக வலிமையாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியமான ஒன்று” என தெரிவித்தார். மேலும், இந்த அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இஷிதா கிஷோரின் தாயார் ஜோதி கிஷோர் கூறுகையில், “என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. எனது மகளின் பயிற்சி நன்றாக இருந்தது.

மேலும், தொடக்கத்தில் இருந்தே அவள், தனது இலக்கை குறியாக வைத்து செயல்படத் தொடங்கினாள். கால்பந்து வீராங்கனையான இஷிதா, சுபோர்டோ கோப்பை மூலம் இந்தியாவின் அறிமுகமாக விளையாட்டிலும் ஜொலித்தாள் டெல்லியின் லோதி சாலையில் உள்ள ஏர் ஃபோர்ஸ் பள்ளியில் அவளது பள்ளிப்படிப்பை முடித்தாள்.

இஷிதாவின் தந்தை இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணிபுரிந்தார். இஷிதா, தனது இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்தார்” என்றார். இதனையடுத்து யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2ஆம் இடத்தைப் பிடித்த கரிமா லோஹியா, கிரோரிமல் கல்லூரியில் தனது பொருளாதாரப் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

அதேநேரம், ஹைதராபாத் ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்ற உமா ஹராதி 3வது இடத்தையும், டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ள ஸ்மிருதி மிஷ்ரா 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க: UPSC Exam results: யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து எலக்ட்ரீஷியன் மகள் சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.