ETV Bharat / state

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30.8 லட்சம் மோசடி - 5 பேர் கைது!

author img

By

Published : Mar 1, 2023, 5:38 PM IST

cbe
cbe

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நான்கு பேரிடம் சுமார் 30 லட்சம் ரூபாயை மோசடி செய்த கோவையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அழகர் ராஜா(30) என்பவர், ராணுவத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்து வந்தார். அப்போது அழகர் ராஜாவுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தாமோதரன் என்பவர் மூலமாக கோவையைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அறிமுகமானார். மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட 5 பேர், தங்களுக்கு அரசுத்துறையில் அதிகாரிகளின் பழக்கம் உள்ளதாகவும், அவர்களிடம் பேசி ராணுவத்தில் உயர் பதவி வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளனர். அதற்கு, கொஞ்சம் பணம் செலவாகும் என்றும் கூறினர்.

இதனை நம்பிய அழகர் ராஜா, அவர்களுக்குப் பணம் கொடுக்க முன்வந்தார். மேலும், தனது பகுதியைச் சேர்ந்த அபினேஷ், சத்தியசீலன், தாமோதரன் ஆகியோருக்கும் வேலை வாங்கித்தர வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து நான்கு பேரிடமும், கடந்த ஆண்டு 19.50 லட்சம் ரூபாய் பணத்தை மனோஜ் பிரபாகர் உட்பட 5 பேர் வாங்கியதாகத் தெரிகிறது. பிறகு பல கட்டங்களாக மொத்தம் 30.85 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.

பின்னர், அழகர் ராஜா உள்ளிட்ட நால்வரையும், ஹைதராபாத், டேராடூன், உத்தரகாசி, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள ராணுவப் பயிற்சி முகாம்கள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளனர். இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த நால்வரும் மனோஜ் பிரபாகர், மதுமோகன் உள்ளிட்டவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு வேலை வேண்டாம், பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பேரும், கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவையைச் சேர்ந்த மது மோகன், அவரது மனைவி சுஜாதா, மனோஜ் பிரபாகர், ரவி, ராஜேஸ்வரி ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், பண மோசடி செய்த கும்பல், சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பான ரமண விஹாரில் வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும், அதனால் அவர்களுக்கு ராணுவ உயர் அதிகாரிகளை தெரிந்திருக்கலாம் என்றும் பணம் கொடுத்தவர்கள் நம்பியதாக தெரியவந்துள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பில், ராணுவத்தில் இல்லாதவர்கள் குடியிருந்ததும் இந்த மோசடிக்கு ஒரு காரணம் என போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: போலீசாரின் கழிவறை தண்டனை.. அங்கேயே லைசால் குடித்த இளைஞர்.. பல மணி நேரத்துக்கு பின் மருத்துவமனையில் அனுமதி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.