ETV Bharat / state

ஜிம்மில் சுருண்டு விழுந்து இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 4:07 PM IST

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

கீழ்ப்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம் பெண் மருத்துவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்விதா (வயது 26). இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை பிரவீன் என்பவர் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

அன்விதா நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு 7:30 மணி அளவில் அன்விதா உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார்.

அங்கு வார்ம் - அப் (warmup) செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அதே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் உடற்பயிற்சி மைய ஊழியர்கள் அன்விதாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தீவிர மாரடைப்பால் அன்விதா உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்ததால் மருத்துவர்கள் முறையாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இயற்கை மரணம் என்று சான்றிதழ் அளித்து உயிரிழந்த இளம் பெண் மருத்துவரின் சடலத்தை தந்தையிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (நவ. 23) மாலை அன்விதாவின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் கேட்ட போது, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இளம் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும், இதனால் மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை மரணம் அடைந்ததாக சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிக் கொண்டு சென்றதாகவும், மேலும் மருத்துவர்களுக்கும், இளம்பெண்ணின் பெற்றோர்களுக்கும் இறப்பில் சந்தேகம் இல்லை என்பதால் உடலை பெற்றுக் கொண்டு நல்லடக்கம் செய்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது கடந்த சில மாதங்களில் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.