ETV Bharat / state

48 மணி நேரத்தைக் கடந்தும் பணி: நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை!

author img

By

Published : Apr 21, 2023, 6:02 PM IST

Minister's Press meet
அமைச்சர்கள் பேட்டி

வாரத்தில் 48 மணி நேரம் கடந்தும் தொழிலாளர்களை பணி செய்ய தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரித்துள்ளார்.

சென்னை: தொழிலாளர் வேலை சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 21) நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்கள் வேலை நேர சட்டத் திருத்தம் எந்த ஒரு தொழிலாளிக்கும் எதிரானது அல்ல. எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே 12 மணி நேர வேலை என்பது நடைமுறைப்படுத்தப்படும். இதில் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லை என்றால் நடைமுறைப்படுத்தப்படாது.

வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை நேரம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா நிறுவனங்களுக்கும் இந்த சட்டத்திருத்தம் பொருந்தாது. விரும்புபவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்ளலாம். எந்த தொழிலாளர்களையும் கட்டாயப்படுத்தி இதை செயல்படுத்தமாட்டோம். 48 மணி நேரத்தையும் கடந்து தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் வற்புறுத்தினால் அரசு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்" எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மின்னணுவியல் தொழில் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் தயாரிக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் 12 மணி நேரம் பணியாற்றி 3 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகமாகும் சூழல் உள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் பெருகி உள்ள நிலையில் தொழிலாளர்கள் விரும்புகிற பணி நேரச் சூழலை ஏற்படுத்தக்கூடிய வகையிலே இந்த சட்டத்திருத்தம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான எந்தச் செயலையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: MK Stalin: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாடு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.