சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
மேலும் வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அதேநேரம் பிப்.19ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் ஒரு பங்காற்றியதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி என்கிற அடிப்படையில் திமுகவினர் கடுமையாகத் தேர்தல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி முதல் கட்டமாக பிப்.15, 16 மற்றும் 17ஆகிய நாட்களிலும், 2ஆம் கட்டமாக பிப்.24 மற்றும் 25 ஆகிய நாட்களிலும் பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை காரணமாக வேட்பு மனுத் தாக்கல் செய்கிற இறுதி நாளில்தான் இரட்டை இலை சின்னம் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் ஈபிஎஸ் தரப்பினர் மிகவும் உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரையில் நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது. இதில் பிரதான கட்சிகளான திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுகவைத் தவிர்த்து தேமுதிகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப்.13 முதல் 15ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 11,000க்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றிருந்தது. அதே மன உறுதியுடன் தனித்து நின்று பல ஆயிரம் வாக்குகளை வாக்கும் முனைப்புடன் சீமான் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மேலும் தேமுதிக சார்பாக ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிப்.19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அப்போது தேமுதிகவிலிருந்த சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதேநேரம் விஜயகாந்தின் ரசிகர் அதிகமாக உள்ள பகுதி என்பதால், பிரேமலதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இவ்வாறு அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் ஈரோடு கிழக்கில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இடைத்தேர்தலை முக்கியமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆளும் திமுக கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது: ஜெயக்குமார் தாக்கு!