பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? - அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ்

author img

By

Published : May 13, 2023, 8:37 AM IST

பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? - துணைவேந்தர் வேல்ராஜ்

ஆர்வம் இருந்தால் மட்டும் பொறியியல் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பிரத்யேக பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளான பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்பில் சேருவதற்கு மே 12ஆம் தேதி மாலை 6 மணி வரையில் 91 ஆயிரத்து 38 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 46 ஆயிரத்து 19 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 17 ஆயிரத்து 618 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் ஜூன் 4ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையில் 4 சுற்றுகளாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அப்போது பேசிய துணைவேந்தர் வேல்ராஜ், “பொறியியல் கல்லூரியில் சேருவது என மாணவர்கள் முடிவு செய்து விட்டால், நல்ல கல்லூரியையும், அதில் நல்ல பாடப்பிரிவையும் தேர்வு செய்ய வேண்டும். மாணவர்களின் திறமை எந்த அளவில் இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அவர்களுக்கு எந்தப் பாடத்தின் மீது ஆர்வம் இருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

உயிரியல் பாடப்பிரிவின் மீது ஆர்வம் இருந்தால் அந்த மாணவர்கள் பயோ டெக்னாலாஜி, உணவுத் தொழில்நுட்பம் போன்ற படிப்பினை படிக்கலாம். அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல் துறையில் உள்ள படிப்பினை படிக்கலாம். கணக்கு பாடம் வராதவர்கள் கூட பொறியியல் துறையில் உள்ள சிலப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் அறிவியல் பிரிவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் இருக்கிறது. மெக்கானிக்கல் மற்றும் சிவில் போன்ற படிப்புகளை படித்து விட்டு வேலையில் சேர நினைப்பவர்கள், 3ஆம் ஆண்டில் இருந்து கூடுதலாக ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரிவில் திறன் இருந்தால் எதிர்காலத்தில் பயன்படும். கம்ப்யூட்டர் துறையில் படிப்பவர்களுக்கு தனியார் நிறுவனங்களில்தான் வேலை வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். சிவில் துறையில் அரசுப் பணிக்கு வாய்ப்புகள் இருக்கிறது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கட்டாயத்தின் பெயரில் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கக் கூடாது.

ஒவ்வொரு பாடப்பிரிவையும் நன்றாக சொல்லித் தரும் ஆசிரியர்கள் சிலர்தான் இருப்பார்கள். கல்லூரியில் ஆசிரியர்கள் சொல்லித் தருவதை மட்டும் கேட்காமல், சிறந்த 20 கல்லூரிகளில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோவை தொடர்ந்து கேட்டு முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச அளவில் பாடம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவையும் முழுவதும் தெரிந்து கொண்டால் சாதிக்க முடியும். கடந்த 30 ஆண்டுகளாக உயர் கல்வித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. உயர் கல்வித்துறையில் பிற மாணவர்கள் படிக்கின்றனர் என்பதற்காக தங்களின் குழந்தைகளும் படித்து விடுவார்கள் என கூற முடியாது.

எனவே மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளை தேர்ந்தெடுக்கக் கூடிய மாணவர்கள், அவற்றுடன் டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிசியில் இன்டெலிஜன்ஸ் போன்றவற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கட்டமைப்பின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சிறந்த கல்லூரியை மக்கள்தான் முடிவு செய்கின்றனர். கல்லூரிக்கு குறைந்த அளவிலான கட்டமைப்பு இருந்தால் அனுமதி அளிக்கப்படும். தரமான கல்வி இருந்தால்தான் வேலை கிடைக்கும்.

எனவே, கல்லூரியின் தரத்தை தேசிய கல்வி தரவரிசைப் பட்டியலில் வெளியிடுகின்றனர். அதனை பார்க்க வேண்டும். நாக் தரவரிசைப் பட்டியலையும் பார்த்து, கட்டணம் செலுத்த முடியுமா என்பதை பார்த்து சேர வேண்டும். பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் சிறந்த கல்லூரி எவை என்பதை தேர்ந்தெடுக்க விரைவில் கல்லூரிகளின் தர மதிப்பீடு வெளியிடப்படும்.

அதனை பார்த்து சேர்ந்து கொள்ளலாம். மேலும், பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியை பெற்று நடத்துகின்றனர். மாணவர்களுக்கான தேர்வினை அவர்களாகவே நடத்துகின்றனர்.

எனவே, கல்வியின் தரத்தை பாதுகாக்கும் வகையில் தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும் என்பதற்காக விதிகளில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழ்நாடு ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த உடன் தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதில் புதிய முறை கடைபிடிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் புதிய மைல்கல் - கிரையோஜெனிக் இன்ஜினின் சோதனை வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.