ETV Bharat / state

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பும் விவாதம்!

author img

By

Published : Aug 14, 2023, 6:42 PM IST

Updated : Aug 15, 2023, 3:00 PM IST

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பும் விவாதம்
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? தமிழ்நாடு அரசியலில் புயலைக் கிளப்பும் விவாதம்

Jayalalitha Saree pulled issue TN assembly: சட்டப்பேரவையில் கடந்த 1989 ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? இரண்டு வருட சபதத்தை முதலமைச்சராக பேரவையில் நுழைந்து சாதித்த கதையின் பின்னணி என்ன? விரிவாகக் காணலாம்.

Jayalalitha

சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழ்நாடு சார்ந்த பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் புயலைக் கிளப்பின. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A.வில் இடம்பெற்றிருக்கும் திமுக பல்வேறு வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடியாக பிரதமர் முதல் நிர்மலா சீதாராமன் வரையிலும் திமுகவை விமர்சிக்கத் தவறவில்லை.

கச்சத்தீவு குறித்த பிரதமரின் பேச்சு விவாதத்தை உருவாக்கிய நிலையில், ஜெயலலிதாவை நீங்கள் நடத்தியது தெரியாதா? என திமுகவைப் பார்த்து நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி சற்று தாமதமாக தமிழ்நாடு அரசியலில் புயலாக மையம் கொண்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் 2வது நாளாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி பேசிய திமுக எம்.பி.கனிமொழி, மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை மகாபாரதத்தில் துகிலுரியப்பட்ட திரௌபதியுடன் ஒப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நிர்மலா சீதாராமன், 1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் ஆடை இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும், எனவே திமுகவுக்கு திரௌபதி குறித்து பேச தகுதியில்லை என கூறினார்.

இச்சம்பவம் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த பின்னர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசியுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை எனவும் கூறியதோடு, அது ஜெயலலிதாவாகவே நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள் என கூறினார்.

மேலும், இப்படி சட்டமன்றத்தில் நடக்க வேண்டியதை முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு அதிமுகவிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆற்றியுள்ள எதிர்வினையில், மு.க.ஸ்டாலினின் கருத்து ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார். சம்பவம் நடந்ததாக கூறப்படும் 1989ம் ஆண்டில் தானும் எம்எல்ஏ வாக சட்டப்பேரவையில் இருந்ததாகவும், அன்றைய தினம் ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு தானே சாட்சி எனவும் கூறியுள்ளார்.

அன்றைய தினம் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய போது, மீண்டும் முதலமைச்சராக தான் இங்கு வருவேன் என்று சபதம் எடுத்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் முதலமைச்சராக அவைக்குள் நுழைந்து தனது சபதத்தை நிறைவேற்றியதாகவும் எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார்.

இதே போன்று முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை சம்பவத்தை நாடகம் என கூறுவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார். சம்பவம் நடந்த நாளான 1989ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சட்டப்பேரவையில் இருந்தவரான திருநாவுக்கரசு இது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள இவர் திருச்சி தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.பி திருநாவுக்கரசர், 1989 சட்டப்பேரவை சம்பவத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. கருணாநிதியை முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடித்து இழுக்கவும் இல்லை என கூறினார். கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்தது உண்மை எனவும், இது தான் சட்டமன்றத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

தானும், மூப்பனாரும், குமரி அனந்தனும் தான் அப்போது நடந்ததை பார்த்தவர்கள் என கூறியுள்ளார். இதில் முப்பனார் உயிருடன் இல்லை. குமரி ஆனந்தனை கேட்டால் சொல்லுவார் என கூறினார். ஆனால் ஜெயலலிதாவின் சேலை பிடித்து இழுக்கப்பட்டது உண்மை தான் என தெலங்கானா ஆளுநரும் குமரி அனந்தனின் தமிழிசை கூறுவதையும் திருநாவுக்கரசர் மறுத்துள்ளார்.

1989ம் ஆண்டு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்த சந்தேகங்கள், சர்ச்சைகள் எழுப்பப்பட்டாலும் அது ஏற்படுத்திய விளைவுகள் மறுக்கவும், மறக்கவும் முடியாதது. ஜெயலலிதா பெரிய அரசியல் ஆளுமையாக உருவெடுத்தும், எடுத்த சபதத்தை நிறைவேற்ற முதலமைச்சராக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததும் நாடறிந்த உண்மை.

இதையும் படிங்க: "ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு" - நீட் பேச்சு கல்வித்துறை மீதான சதி என முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்!

Last Updated :Aug 15, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.