ETV Bharat / state

பொன்முடிக்கு சிறை தண்டனை.. திருக்கோவிலூர் தொகுதியின் நிலைமை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 1:08 PM IST

Updated : Dec 21, 2023, 1:38 PM IST

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi assets case: உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பாய்ந்தது முதல் சிறை தண்டனை பெற்றது வரை, வழக்கு கடந்து வந்த பாதையை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்திற்கு வந்த காட்சி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மனைவி விசாலட்சுமி உள்பட இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபரதாமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, பொன்முடி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்.

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனைவியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகவும், பொன்முடியின் மனைவிக்குச் சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை விசாரணை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என பொன்முடி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு: இந்த நிலையில் இந்த வழக்கின் அதிரடி தீர்ப்பை நேற்றைய முன்தினம் (டிச.19) நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார். அதில், “பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியின் வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டு, இரண்டு பேர் வருமானத்தையும் சேர்த்து விசாரணை செய்யாமல் சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளது. பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி, கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலமே இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டதா என்பதை சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்து இருக்க வேண்டும். ஆனால், 2006 – 2011 வரையிலான 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, விசாலாட்சியின் தனிப்பட்ட வருமானத்தில் இருந்து வாங்க முடியாது என்பதை சிறப்பு நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. அமைச்சர் பொன்முடி தன் மனைவி விசாலாட்சி பெயரில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியதற்கு நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தும், அதை ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம், வருமான வரிக்கணக்கு அடிப்படையில் விடுதலை செய்துள்ளது.

2006 - 2011ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய், அதாவது வருமானத்தை விட 64.90 சதவீதத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளதால், இருவரையும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் இந்த குற்றத்திற்கான தண்டனையை நாளை அதாவது இன்று (டிச .21) அறிவிப்பதாகவும், குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட பொன்முடியும், விசாலாட்சியும் நேரில் ஆஜராக வேண்டும் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி காலை 10 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தனர். உடனடியாக அவர்களின் காரில் இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டது. சரியாக 10.42 மணிக்கு நீதிமன்ற அறைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் வந்தார். அப்போது, தண்டனை அறிவிப்பதற்கு முன் பொன்முடி தரப்பில் ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து பொன்முடி தரப்பில், தனக்கு 70 வயதாகிறது, மனைவி விசாலாட்சிக்கு 63 வயதாகிறது. அதனால் மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை அடுத்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த இருவருக்கும் உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, 30 நாட்கள் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ பதவி இழப்பு: நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி, விடுதலை செய்யப்பட்ட பிறகும், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

முன்னதாக மறைந்த முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பைச் சந்தித்தனர். அந்த வரிசையில் மூன்றாவதாக பொன்முடி அமைச்சர் பதவியில் இருக்கும் போதே, தகுதியிழப்பை சந்திக்கிறார்.

பொன்முடியின் தகுதியிழப்பு குறித்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியான பிறகு, பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

Last Updated :Dec 21, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.