ETV Bharat / state

ஒரு புத்தகம் உங்களை என்ன செய்யும்? விளக்குகிறார் கவிஞர் உதயசங்கர்

author img

By

Published : Apr 23, 2021, 3:41 PM IST

இன்று உலகம் முழுவதும் புத்தகத் தினம் கொண்டடாப்பட்டு வரும் நிலையில் கவிஞர் உதயசங்கர் ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதனை விளக்குகிறார். இதோ அவர் புத்தகங்கள் குறித்து குறிப்பிட்ட 20 கருத்துகள்...

what a book does said poet udayasankar on World Book Day
what a book does said poet udayasankar on World Book Day

  1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் நமக்குத் தெரியவரும்.
  2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.
  3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
  4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.
  5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.
  6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணரமுடியும்.
  7. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழிபேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.
  8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல்பார்வை உருவாகும்.
  9. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சனாதனத்துக்கும் மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.
  10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
    what a book does said poet udayasankar on World Book Day
    கவிஞர் உதயசங்கர்
  11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் ஏற்படும்.
  12. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காக்கை குருவி, கடல், மலை, என்று இயற்கையை ஆராதிக்கத்தோன்றும்.
  13. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதலின் ஊற்றுக்கண் பொங்கிப்பிரவகிக்கும்.
  14. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சாதி, மதத்தின் பின்னுள்ள சதிவலையைப் புரிந்து கொள்ள முடியும்.
  15. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதிவலையைத் தெரிந்து கொள்ள முடியும்.
  16. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்.
  17. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது சமத்துவமற்ற, ஏற்றதாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.
  18. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத்தோன்றும்.
  19. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும் அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.
  20. புத்தகம் மனிதகுலத்தின் அறிவுச்சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.