ETV Bharat / state

ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த மேற்கு வங்க நபர் கைது.. ஆம்பூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Jun 25, 2023, 8:21 PM IST

Updated : Jun 25, 2023, 8:26 PM IST

தொடர்ந்து ரயில்வே தடங்களை குறிவைக்கு ஆசாமிகள்
தொடர்ந்து ரயில்வே தடங்களை குறிவைக்கு ஆசாமிகள்

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த நபரை ஜோலார்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த நபர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வீரக் கோயில் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை பெங்களூரு- சென்னை செல்லும் ரயில்வே மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் மர்மநபர் பெரிய அளவிலான கான்கிரீட் கலவையிலான கற்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்வே மார்க்கத்தில் இன்று காலை மைசூரிலிருந்து ஆம்பூர் வழியாகச் சென்னைக்குச் செல்லக்கூடிய காவிரி எக்ஸ்பிரஸ் ஆம்பூரைக் கடந்து வீரக்கோயில் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கற்கள் மீது மோதியுள்ளது.

இதனால் ரயில் என்ஜீனில் இருந்து பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது குறித்துச் சந்தேகமடைந்த லோகோ பைலட் விரைவு ரயிலை அருகிலிருந்த பச்சை குப்பம் ரயில் நிலையத்தில், ரயிலை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது ரயில் மோதியது தெரியவந்துள்ளது. உடனடியாக ரயிலின் லோகோ பைலட் இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையில் காவல்துறையினர் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரயில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த மர்ம நபர்களைக் கண்டறிய சென்னையிலிருந்து மோப்பநாய் உதவியுடன் களமிறங்கினர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ராபீன் பயிற்சியிலிருந்த மோப்பநாய் ஜான்சியின் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய போது, மோப்பநாய் ஜான்சி ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைத்த இடத்திலிருந்து சற்று தூரம் ஓடி அருகில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நின்றது.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள கடைகள், கோயில்கள் மற்றும் பெரியகொம்பேஸ்வரம், சின்னகொம்பேஸ்வரம், கன்னிகாபுரம், சோமலாபுரம், புதுகோவிந்தாபுரம் என பல்வேறு கிராமப் பகுதிகளில் சென்னை ரயில்வே பாதுகாப்புப் படைத் துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான 12 பேர் கொண்ட ரயில்வே குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

பின்னர், ஆம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து, ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் அவரின் தோள் பட்டையில் இருந்து துணிகளை மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்த போது அவர் தான் வீரக்கோயில் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய ரயில்வே காவல்துறையினர், அவர் மேற்கு வங்கமாநிலத்தை சேர்ந்த மங்கல் பிரசாத் என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மங்கல் பிரசாத்தை தமிழக அரசின் இலவச தாய் சேய் ஊர்தி மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக ரயில்வே காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை தீர்த்தக் குளம் சீரமைப்பு: தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு!

Last Updated :Jun 25, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.