ETV Bharat / state

'துணைவேந்தர்கள் வழங்கிய ஆலோசனையை மத்திய அரசிடம் தெரிவிப்போம்' - ஆளுநர் ஆர். என்.ரவி!

author img

By

Published : May 5, 2022, 5:25 PM IST

12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம், Governer
12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

12ஆவது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கருத்தரங்கில் அவர் பேசியபொழுது, எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை வகுக்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் நடத்திய கூட்டம் சிறப்பாக இருந்ததாகவும், துணைவேந்தர்கள் கூறிய கருத்துகளை மத்திய, மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

சென்னை: எம்.ஆர்.சி நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் 12ஆவது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அவர், "நம் நாடு 75ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடி வரும் இந்நேரத்தில், நம் நாட்டிற்காக போராடிய வீரர்களை போற்றும் வகையில் இதனை நாம் கொண்டாடி வருகிறோம். அவர்களுக்கு நமது மரியாதையை செலுத்தும் ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. அதேபோல் இன்னும் 25ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டை எட்ட உள்ள நிலையில், 75 ஆண்டுகள் என்பது சாதாரணம் இல்லை. நிறைய விஷயங்களை சாதித்தும், கற்று கொண்டும் உள்ளோம்.

முழுமை பெறாத 5 ஆண்டுகள் திட்டம்: ஒவ்வொரு முறையும் புதிய அரசு வரும் போது, 5 ஆண்டுகள் திட்டம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளோம். ஆனால், குறிப்பிட்ட 5 ஆண்டுகளில் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செய்து முடிக்க முடிவதில்லை. அனைத்துமே முழுமையற்றதாக இருக்கிறது.

Governor, Governor speech ,ஆளுநர் ஆர்.என்.ரவி
12வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
ஒரே பாரதம்: அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா தனது வெற்றியைப் பதிவு செய்யும். குறிப்பாக பிரதமர் கூறுவது போன்று, ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோரோடும், எல்லோருக்காகவும் இருக்க வேண்டும். மேலும் நம் நாட்டு மக்களின் வலிமையான முயற்சியின் காரணமாக தேசம் அனைத்திலும் வெற்றிபெற்று வருகிறது. நம் இளைஞர்கள் பெரிதாக கனவு கண்டு, அதில் சாதனையையும் புரிந்து வருகின்றனர்'' என்றார்.மேலும் அவர், ''அண்மையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 2047ஆம் ஆண்டில் நாடு எப்படி இருக்க வேண்டும். அதற்கான பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான கருத்துகளை வழங்கியுள்ளது. துணைவேந்தர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளை மத்திய, மாநில அரசிடம் தெரிவித்துள்ளோம்.புதிய இந்தியா: அதுமட்டுமின்றி உலகமே வைரஸ் நோயால் பாதிப்பு அடைந்திருந்த சூழ்நிலையில், இந்தியா அதற்கான மருந்தை தயாரித்து வழங்கியது. நம் நாட்டிற்கு மட்டுமின்றி 150 நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசியை இந்தியா வழங்கி உள்ளது. இதுவே "புதிய இந்தியா"'எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "இந்த கருத்தரங்கு தேசிய அளவில் முக்கிய நிகழ்வாக இருக்கும். மீன்வள அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் இங்கு கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு மீன்வள ஆதாரங்களை பாதுகாத்தல், பயன்படுத்தல், மீன் உற்பத்தியை அதிகரித்தல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக செயல்படுகிறது. ஆய்வுகள் மூலம் பல தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மீன்வளப்பல்கலைக்கழகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மீன்வளத்துறையில் புதிய மைல் கல்லை எட்ட இந்த கருத்தரங்கம் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.