ETV Bharat / state

Viral Video: என்ன 2 ஆயிரம் ரூபாயா..! வண்டியில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்கள்!

author img

By

Published : Jun 5, 2023, 11:01 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட்ட நபர் 2 ஆயிரம் ரூபாய் வழங்கிய நிலையில் வாங்க மறுத்த ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டியில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்கள்

சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்லாது என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். மேலும் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்பதால் பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வாடிக்கையாளர் ஒருவர் பெட்ரோல் போட சென்றுள்ளார்.

அப்போது அவர் 2 ஆயிரம் ரூபாயை காட்டி, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார். பெட்ரோல் நிலைய ஊழியரும் பெட்ரோல் நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபாய்த் தாளை வாங்கி பெட்ரோல் பங்கின் சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார்.

அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக்கூடாது எனக்கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் வாங்குங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பெட்ரோல் நிரப்பியவர் தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் பெண் சூப்பர்வைசர் கூறியதன் படி ஊழியர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்துள்ளார். பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அங்கிருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த போது மக்கள் தங்களிடமிருந்த 500, 1000 நோட்டை மாற்றுவதற்கு திணறினர். அதன் பின் புழக்கத்தில் வந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

செப்.30ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்திருந்தாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாடிக்கையாளரிடம் வாங்கினால் வங்கியில் மாற்றுவது கடினம் எனக் கருதி பெட்ரோல் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ART Jewelry Scam Complaint: "ஏழைங்க பாதாளத்துக்கு போறோம்" பணத்தை இழந்த பொதுமக்கள் கதறல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.