ETV Bharat / state

சென்னை பல்கலை. கீழுள்ள தனியார் கல்லூரிகளில் விதிகள் பின்பற்றப்படவில்லை - துணைவேந்தர்

author img

By

Published : Feb 15, 2023, 10:49 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் விதிகள் பின்பற்றவில்லை
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் விதிகள் பின்பற்றவில்லை

சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சில கல்லூரிகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களும், முறையான நிலப் பதிவேடுகளும் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 60 சதவீதம் கல்லூரிகளில் ஆசிரியர், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான பல்கலைக்கழக விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதும், சில கல்லூரிகளில் தேவையான தகுதிகள் இல்லாத ஆசிரியர்களும், முறையான நிலப் பதிவேடுகளும் இல்லை என்பது கண்டறிப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கெளரி கூறும்போது, 'சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்றக் கல்லூரிகளில் உள்ள வசதிகள் குறித்தும், பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிமுறைகளை பின்பற்றுகின்றனவா? என்பதையும் பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற பல்கலைக்கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்டவர்கள் அடங்கிய குழுக்களின் ஆய்வும் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற 94 உதவி பெறும் கல்லூரிகள், 52 தனியார் கல்லூரிகள் இடம் பெற்றுள்ள ஆய்வின் போது, வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கை போன்ற விவரங்களைக் கோரி அனைத்து இணைப்பு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்தக்குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு செய்து தகவல்களை சரிபார்த்து வருகின்றனர். பல்கலைக்கழக இணைப்புக் குழு ஆய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கல்லூரிகள் குறித்த அறிக்கைகளைத் தயாரித்து வருகிறது. அவை சிண்டிகேட் கூட்டத்தில் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவது ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பல்கலைக் கழக மானியக்குழு நிர்ணயம் செய்த ஊதியம் வழங்கப்படுகிறது. உதவிபெறும் கல்லூரியால் நடத்தப்படும் சுயநிதி பிரிவுகளிலும், தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

மேலும், சில இணைப்புக் கல்லூரிகளில் பிஎச்டி படித்த போதிய ஆசிரியர்கள் இல்லை. நல்ல தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் சிலர், சரியான நிலப் பதிவேடுகளை வைத்திருக்கவில்லை. பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்கப்படும்' எனவும் துணைவேந்தர் கெளரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பயங்கரவாத எண்ணம் இல்லை' - என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.