ETV Bharat / state

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு

author img

By

Published : Mar 30, 2023, 3:01 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

O.Panneer selvam
ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரள மாநிலம் வைக்கம் என்ற பகுதியில், கோயிலை சுற்றிய வீதிகளில் பட்டியல் சமூக மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இத்தீண்டாமைக்கு எதிராக டி.கே.மாதவன் என்பவர் முதலில் போராட்டத்தில் ஈடுபட்டார். 1924ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு ஆங்கிலேயே அரசு தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. பின்னர் தமிழ்நாட்டில் இருந்து வைக்கம் சென்று போராட்டத்தை தந்தை பெரியார் முன்னெடுத்தார்.

இந்நிலையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளதாகவும், இந்த விழா இன்று (மார்ச் 30) துவங்கி, ஓராண்டு வரை நடைபெறும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஓ.பன்னீர் செல்வம், "சமூக நீதிக்காக பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தை வரலாற்று நிகழ்வாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார். விழாவை ஓராண்டு நடத்த வேண்டும் எனவும் நமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்தங்கிய மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததில், அதன் அடித்தளமாக இருந்தது தந்தை பெரியாரின் கொள்கை தான். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த சிறப்பு விழா, வரலாற்றில் மிகப்பெரும் முக்கியத்துவத்தை பெறும். இதை தேசிய விழாவாக முதலமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் சபாநாயகர் தனபால், "முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த மன்றத்தில் வந்து அமருவதற்கு உறுதுணையாக இருந்தவர் தந்தை பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்ற அவர் வைக்கம் போராட்டத்தை நடத்தி பாடுபட்டார். அப்படிப்பட்டவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ளனர். இதை அதிமுக வரவேற்கிறது. தந்தை பெரியாருக்கு, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தியுள்ளார்" என கூறினார்.

இதையும் படிங்க: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.