ETV Bharat / state

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

author img

By

Published : Mar 30, 2023, 1:56 PM IST

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பில் ஓராண்டுக்கு கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

Stalin
வைக்கம்

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று(மார்ச்.30) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர், "வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, சில நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். வரும் ஏப்ரல் 1ஆம் தேதி, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன்.

வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி. பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கும் வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். எல்லை கடந்து சென்று வைக்கத்தில் பெரியார் போராடியதை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் 'வைக்கம் விருது' சமூகநீதி நாளான செப்டம்பர் 17ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீன முறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குத்து கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குபேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிமற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டு வரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று 'தமிழ் அரசு' பத்திரிகை மூலம் வெளியிடப்படும். இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்துக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும்.

திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் போது வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமானது. சாதாரண ராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான போராட்டக் களம் அது. அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக இன்றைய இளைய சமுதாயம் திகழ, இது போன்ற கடந்த கால வரலாறுகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெரியார் மொழி கடந்தவர், நாடு கடந்தவர், அவர் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர் அல்ல என்பதை அவரது கருத்துக்களின், செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள். நேற்றைய கிளர்ச்சிக்கும் - இன்றைய முயற்சிக்கும் - நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை தந்தை பெரியாரின் தத்துவங்கள். அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில் எங்களது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: விழுப்புரம் கொலை சம்பவம்; எதிர்கட்சியினர் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.