ETV Bharat / state

விழுப்புரம் கொலை சம்பவம்; எதிர்கட்சியினர் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்

author img

By

Published : Mar 30, 2023, 1:34 PM IST

விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin explained the the Villupuram murder incident in Assembly
விழுப்புரம் கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், "விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பற்றிய அந்தச் செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் சிவக்குமாரும் இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சரகம், G.R.P தெருவைச் சேர்ந்தவரும், எம்.ஜி ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவருமான ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று (29-3-2023) அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரிழந்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குற்றத்தில் ஈடுபட்ட இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என கூறினார். சகோதரர்கள் இருவரும் மது மற்றும் கஞ்சா போதையில் தகராறு செய்ததாகவும், இதனை தடுக்க முயன்ற இப்ராஹம் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, இதனை தடுத்திருந்தால் இது போன்ற குற்றங்களை தடுத்திருக்க முடியும் என கூறினார்.

இதையும் படிங்க: ராகுல் பதவி நீக்கம்: "காங்கிரஸ் கட்சிக்கு மோடி நல்ல வாய்ப்பை உருவாக்கியுள்ளார்" - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.