ETV Bharat / state

கடன் தொல்லை - செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!

author img

By

Published : Jul 13, 2023, 3:49 PM IST

Etv Bharat
Etv Bharat

சொந்த ஊரில் கடன் தொல்லை இருப்பதால் கடனை அடைப்பதற்காக மூதாட்டியின் செயினை பறித்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையனை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (60). மூதாட்டியான இவர் மண்ணடியில் உள்ள தனியார் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் கணினி ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கௌசல்யா நேற்று (ஜூலை 12) வேலை முடிந்துவிட்டு லிங்கி செட்டி தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவரது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். செய்வதறியாது திகைத்து நின்ற கௌசல்யா அந்த கொள்ளையனை பிடிக்க முயன்றார். ஆனால், கொள்ளையடித்தவுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கௌசல்யா வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வடக்கு கடற்கரை காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவான காட்சிகளை வைத்து முக அடையாளங்களை கண்டறிந்தனர். பின்னர், சுமார் 2 மணி நேரத்திலேயே செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் உத்தர பிரேதச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விவின் குமார் மிஸ்ரா (28) என்பது தெரியவந்தது. மேலும், இவர் திருவொற்றியூரில் தங்கி, மூதாட்டி வேலை பார்த்த அதே நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், கொள்ளையன் விபின் குமார் இன்று (ஜூலை 13) தனது சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், சொந்த ஊரில் விபில் குமாருக்கு அதிகப்படியான கடன் இருப்பதால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, கடனை அடைப்பதற்கு தனது நண்பர்களை நாடியுள்ளார். நண்பர்கள் யாரும் உதவ முன்வரவில்லை.

ஊருக்குச் செல்வதற்கான கால நேரம் விவின் குமாருக்கு குறைவாக இருந்ததால் உடனடியாக பணத்தேவையை பூர்த்தி செய்ய ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அப்பொழுது, தனது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய மூதாட்டி கழுத்தில் தொங்கிய இரட்டை செயின் அவரது கண்ணை உறுத்தியதால் நகையை பறித்துவிட்டு சௌகார்ப்பேட்டையில் விற்றுவிட்டு அந்த பணத்தை வைத்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து தான் விவின் குமார் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து விவின் குமாரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து 1 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் தயாரித்த இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.